நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் (Captain Miller) இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் கடந்து வந்த பாதை பற்றி காணலாம். 


ரிலீசான கேப்டன் மில்லர் 


தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ஆக்‌ஷன் படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரலாற்று கதையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் கேப்டன் மில்லர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், வினோஷ் கிஷன், அதிதி பாலன், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் வெளியீடாக இன்று (ஜனவரி 12 ஆம் தேதி) தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 900க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


சர்ச்சைகளை கடந்த கதை 


கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது படக்குழுவினரின் அயராத உழைப்பு நம் கண்ணுக்கு தெரியும். ஆனால் இதன் பின்னணியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடைபெற்றது. அதாவது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு அருகே  நடந்தது. அந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு இடைப்பட்ட பகுதியாகும். படம் முழுக்க தீப்பற்றுவது, குண்டு வெடிப்பது தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 


படக்குழுவினரின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கும் சம்பவத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும்,  அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் மத்தளம்பாறையில் நடக்கும் கேப்டன் மில்லரின் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் ஷூட்டிங் இரண்டு வாரம் நின்று போனது. இதனைத் தொடர்ந்து மத்தளம் பாறையில் படப்பிடிப்பு நடத்த வாங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இறுதியாக திரை வடிவமாக வந்துவிட்டது. 


ப்ரீ ரிலீஸில் பிரச்சினை


இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கேப்டன் மில்லர் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஷ்வர்யா ரகுபதியும் பங்கேற்றிருந்தார். அவரிடம் கூட்டத்தைப் பயன்படுத்தி தனுஷ் ரசிகர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஐஷ்வர்யா அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் வைத்தார். இப்படி பல சர்ச்சைகளை கடந்து வந்த கேப்டன் மில்லர் இன்று வெளியாகிவிட்டது. 


ALSO READ | Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? - ட்விட்டர் விமர்சனம் இதோ..!