2001 ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கிட்டதட்ட 8 படங்கள் ரிலீசாகியுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். 


ஆளவந்தான் 


கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் “ஆளவந்தான்”. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, ஃபாத்திமா பாபு, அனு ஹாசன் என பலரும் நடித்திருந்தனர். ஷங்கர் மகாதேவன் கூட்டணி இப்படத்துக்கு இசையமைத்தனர். இரட்டை வேடங்களில் கமல் நடித்த நிலையில் மொட்டைத்தலையுடன் வரும் கமல்ஹாசன் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக மாறினார். 

தவசி 


உதயஷங்கர் இயக்கத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா, பிரதீக்‌ஷா, ஸ்ரீமன், வடிவேலு,பொன்னம்பலம், நாசர், வடிவுக்கரசி என பலரும் நடித்த படம் ‘தவசி’. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 


ஷாஜகான் 


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காதல் படங்களில் மிகவும் முக்கியமான படம் “ஷாஜகான்”. கே.எஸ்.ரவி இயக்கிய இப்படத்தில் ரிச்சா பலோட், விவேக், தேவன், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மணிஷர்மா இசையமைத்த இப்படத்தில் மீனா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஷாஜகான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. 


நந்தா


நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரை அடுத்த தளத்திற்கு எடுத்த சென்றதில் “நந்தா” படத்துக்கு முக்கிய இடமுண்டு. பாலா இயக்கிய இந்த படத்தில் லைலா, ராஜ்கிரண், கருணாஸ், சரவணன், ஷீலா, வினோத் கிஷான் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. 



மனதை திருடி விட்டாய்


ஆர்.டி. நாராயணமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா, காயத்ரி ஜெயராம், கௌசல்யா, வடிவேலு, விவேக், ரஞ்சித் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “மனதை திருடி விட்டாய்”. இந்த படத்தில் வடிவேலுவின் ஆங்கில பாடலும், விவேக்கின் கையை இழந்தது போல நடிக்கும் காமெடிகளும் மிகவும் பிரபலம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற “மஞ்சள் காட்டு மைனா” பாடல் மிகவும் பிரபலம்.
 
பார்த்தாலே பரவசம் 


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 100வது படம் என்ற சிறப்போடு வெளியான படம் “பார்த்தாலே பரவசம்”. கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் மாதவன், சிம்ரன், சினேகா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்தார். ஆனால் இந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. 


பொன்னான நேரம் 


ரவிராஜா இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடித்த படம் “பொன்னான நேரம்”. இப்படத்தில் பிரதியுக்‌ஷா, அலெக்ஸ், சண்முகசுந்தரம், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரதீப் ரவி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


ஆண்டான் அடிமை 


இயக்குநர், நடிகர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி, ஜூனியர் பாலையா, ரஞ்சித், கமலா காமேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “ஆண்டான் அடிமை”.இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்,