அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள மாடர்ன் லவ் ஆந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த ஆந்தாலஜியில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நினைவோ ஒரு பறவை என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் விமர்சனத்தை கீழே காணலாம். 


நினைவோ ஒரு பறவை


சாம் மற்றும் கே ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள். ஏதோ சில காரணங்களால் இந்த இருவரும் ப்ரேக் அப் செய்துகொள்கிறார்கள். கே வை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாள் சாம். கே வை மறக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார் சாம். அப்போது தான் ஒரு விபத்தில் கே வின் நியாபகம் எல்லாம் அழிந்துவிட்டதாகவும், இருவரும் ப்ரேக் அப் செய்துகொண்டதை முதற்கொண்டு எதுவுமே கே விற்கு நியாபகம் இல்லை எனத் தெரியவருகிறது.


மீண்டும் கேவிற்கு தங்களது பழைய நினைவுகளை சாம் எடுத்துக்கூறுவதன் வழியாக இவர்கள் இருவரின் வாழ்க்கைத் தருணங்களை முன் பின் என்று பார்க்கிறோம். கடைசியில் சாம் மற்றும் கே சேருகிறார்களா? இருவரும் பிரிந்துவிட்ட செய்தியை சாம் கேவிடம் தெரிவிக்கிறாரா? என்பது நினைவோ ஒரு பறவையின் கதை.



மற்ற ஐந்து கதைகளைக் காட்டிலும்  சற்று பெரியப் படம் நினைவோ ஒரு பறவை. படத்துடன் ஒன்றுவதற்கு சற்று நேரம் நமக்குத் தேவைப்படுகிறது.  தியாகராஜா குமாரராஜா இந்த கதையை நிதானமாக சொல்ல விரும்பியிருப்பதற்கான நியாமம் படத்தில் இருக்கிறது.


காதல், காமம், உரையாடல் சில நேரங்களில் எதுவும் இல்லை வெறும் சிரிப்பு ஆகிய சாதாரணமானத் தருணங்களை இளையராஜாவின் இசைப் பின்னனி மற்றும் கிட்டதட்ட மொத்த படத்தையுமே அறை இருளில் எடுக்கப்பட்டு ஒரு விதமான மயக்கத்தை தருகிறார் டிகே. கடந்த காலமும் நிகழ்காலமும் முன் பின்னாக மாறி மாறி வருவதால் கதை லேசாக குழப்புவது போல் தோன்றுகிறது. ஒரு வேளை அதுவே கூட நோக்கமாக இருக்கலாம். நினைவை களைத்துப் போட்டு எது நிஜம்? எது பொய்? என்கிற வரையறைகளை கலைத்துவிடுகிறது இந்தப் படம்.


ஹாலிவுட் திரைக்கதை பாணி:


ஹாலிவுட்டில் பிரபலமான திரைக்கதை எழுத்தாளரான சார்லீ காஃப்மானின் திரைக்கதை பாணியை தியாகராஜா குமாரராஜா இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார். ஒரு வகையில் eternal sunshine of the spotless mind படத்தை நினைவுறுத்துகிறது நினைவோ ஒரு பறவை. காமம் தொடர்பான காட்சிகள் ஒரு மீறலாக மட்டுமில்லாமல் ஒரு இன்பக் கூத்தாக தொழில்நுட்பத்தின் பயன்பாட்டோடு எடுக்கப்பட்டிருக்கின்றன.



 


படத்தில் சாம் ஆக நடித்த வமிகா காபி மற்றும் பிபி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் இசை தியாகராஜாவின் ஒளியமைப்புகளில் ட்ரான்ஸ் ஃபீலை தருகிறது. தியாகராஜா குமாரராஜா தேர்வு செய்யும் லோகேஷன்  செட் டிசைன் ஆகியவை நம்மை நம்மை புதிதான ஒரு அனுபவத்திற்கு முன்னதாகவே தயார் செய்துவிடுகின்றன. அதேபோல் குமாரராஜாவிற்கு எப்போதும் இருக்கும் வித்தியாசமான தியரிகள் படத்தில் அவ்வபோது உரையாடலில் வந்து சின்ன சுறுசுறுப்பை சேர்க்கின்றன.