தனது அடுத்த கட்ட அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸ் தற்போது வெவ்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு சாத்தியங்களின் வழியாக அணுகத் தொடங்கியிருக்கிறது. 


நாம் வாழும் பிரபஞ்ச வெளியும், யதார்த்த நிகழ்வுகளும் நாம் யூகிக்க முடியாத நிகழ்வுகளின் வழியாக இயங்கி வருகின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தேர்வுகளும் நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நமக்குத் தெரியாத அளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தவல்லதாக இருக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் சின்ன தெரிவுகளிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், நமது வாழ்க்கை இன்று வேறொரு பாதையில் பயணித்திருக்கலாம். இந்த அடிப்படையில் உருவாகியிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் 'What If...?' தொடர். அனிமேஷனில் வெளிவந்திருக்கும் இந்தத் தொடர், கடந்த 10 ஆண்டுகளில் மார்வெல் திரைப்படங்களில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளையும், முக்கியமான கதாபாத்திரங்களையும் வெவ்வேறு சாத்தியங்களில் மூலம் வேறொரு கதையைச் சொல்ல முயன்றிருக்கிறது. 


'What If...?' தொடரின் முதல் எபிசோட் இன்று டிஸ்னி ப்ளஸ் தளத்தில் வெளியானது. கேப்டன் அமெரிக்காவாக ஸ்டீவ் ராஜர்ஸ் உருமாற்றப்படாமல், அவர் விரும்பிய பெண்ணான பெக்கி கார்டர் மாற்றப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்கிறது இந்தக் கதை. ஒரு கதாபாத்திரம் தனக்கு முன் கிடைக்கும் வாய்ப்பை வேறு மாதிரி பயன்படுத்திக் கொள்வது, அதனைச் சுற்றியுள்ள உலகத்தையே மாற்றுகிறது. நியூ யார்க் மாநகரத்தின் ப்ரூக்ளின் பகுதியைச் சேர்ந்த ஏழை இளைஞன் ஸ்டீவ் ராஜர்ஸ் கேப்டன் அமெரிக்காவாக மாறாமல், உளவுத்துறை ஏஜெண்ட் பெக்கி கேப்டன் அமெரிக்காவாக மாற்றப்படுகிறார். Captain America: The First Avenger படத்தின் கதையை பெக்கியை முன்னிலைப்படுத்தி இயக்கியிருக்கிறார்கள். 



கேப்டன் அமெரிக்கா - What If...? தொடரிலும் திரைப்படத்திலும்


 


ஒரு வெள்ளையின ஆண் கேப்டன் அமெரிக்காவாக ஏற்கப்படுவதற்கும், ஒரு பெண் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் சமூக அளவில் மிகப்பெரிய வேறுபாடு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான The Falcon and the Winter Soldier என்ற மார்வெல் தொடரில் கேப்டன் அமெரிக்கா தோன்றிய காலத்தில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் சூப்பர் சோல்ஜராக மாறுவது எப்படி நிறவெறியுடன் அணுகப்பட்டது என்று கூறப்பட்டது. தற்போது மார்வெல் உலகத்தில், கேப்டன் அமெரிக்காவாகப் பொறுப்பேற்றிருப்பதும் கறுப்பினத்தைச் சேர்ந்த சாம் வில்சன் தான். மாபெரும் அமெரிக்க கனவு என்றழைக்கப்படும் அமெரிக்கத் தேசியப் பெருமிதத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த கேப்டன் அமெரிக்காவை மார்வெல் அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும், What If...? தொடருக்காக, அதே பொறுப்பு வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.


ஸ்டீவ் ராஜர்ஸைப் போல வரவேற்கப்படாமலும், பெண் என்பதால் புறக்கணிக்கப்படும் கேப்டன் அமெரிக்காவாக பெக்கி கார்டர் காட்டப்படுகிறார். ஐயர்ன் மேனின் அப்பா ஹாவர்ட் ஸ்டார்க்குடன் சேர்ந்து, Hydra Stomper என்ற ஐயர்ன் மேன் பாணியிலான சூப்பர்ஹீரோவாக ஸ்டீவ் ராஜர்ஸ் இதில் காட்டப்படுகிறார். கேப்டன் அமெரிக்காவாக உருவாக பிறகு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம் என்னவென்று கேட்கப்பட, “நான் கவனிக்கப்படுகிறேன். முன்பை விட மரியாதை அளிக்கப்படுகிறேன்” என்று பெக்கி சொல்வது, சமூகத்தில் பெண்களுக்கான நியாயமான இடத்திற்காக எழும் கோரிக்கையின் குரல். 



வெவ்வேறு கேப்டன் அமெரிக்கா சூப்பர்ஹீரோக்கள்


 


அனிமேஷன் என்பதால் அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லையென்ற போதும், குறைந்த நேர அளவில் வெளியாகியிருக்கும் முதல் எபிசோடில் உணர்வுகளை மைக்ரோஸ்கோப்பில் தேட வேண்டியதாக இருக்கிறது. ஸ்டீவ் ராஜர்ஸுக்கும், பக்கி பார்ன்ஸுக்கும் இடையிலான நட்பு உன்னதமானது. What If என்ற பெயரில், ஸ்டீவும், பக்கியும் நெருங்கிய நண்பர்களாக இல்லாமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் இதனால் எழாமல் இல்லை. 


மார்வெல் தொடர்த் திரைப்படங்களின் வரிசையைப் போல, இந்தத் தொடரும் அமையுமா, ஒவ்வொரு எபிசோடுக்கும் இடையில் தொடர்பு இருக்குமா என்பதை அடுத்தடுத்த வாரங்களில் வரும் எபிசோடுகள் உறுதிப்படுத்தும். அவெஞ்சர்ஸ் ரசிகர்களும், மார்வெல் ரசிகர்களும் முதல் எபிசோடில் பெக்கியைக் கேப்டன் அமெரிக்காவாக ரசிக்கலாம். ஸ்டீவ் ராஜர்ஸின் புதிய அவதாரத்தையும் கொண்டாடலாம்.