சினிமாவில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் “மேனேஜர்” சீனா தன்னுடைய சினிமா அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் சீனிவாச அய்யர். இவரை திரைத்துறையில் மேனேஜர் சீனா என சொன்னால் தான் பலருக்கும் தெரியும். நாடகங்கள் மூலம் நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த சீனா தற்போது நடிப்பில் இருந்து விலகி தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதுவரை 3800க்கும் மேற்பட்ட நாடகங்கள், மற்றும் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடத்தில் புகழ் பெற்றார்.
குறிப்பாக விவேக், வடிவேலு படங்களில் இவரின் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படியான நிலையில் சீனா தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “நான் வயசானதால் தான் நடிக்கவில்லை. இந்த வயதில் வசனம் எல்லாம் மறந்து போயிடும். என்னுடைய பெயருக்கு காரணம் நான் ஒரு நாடகத்தில் மேனேஜர் கேரக்டரில் நடித்தேன். அதில் டைட்டிலில் போட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயருடன் சேர்த்து “மேனேஜர்” சீனா என ஒட்டிக் கொண்டது. நான் நிறைய நாடகத்தில் நடித்துள்ளேன். பள்ளியில் படிக்கும் போது சாயங்காலம் நேரம் நடிக்க போய் விடுவேன். அதன் பிறகு படங்களிலும் நடித்தேன்.
ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் நான் ஒரு விளையாட்டு வீரர். பி.என்.சிமெண்ட்ஸ் அணிக்காக விளையாடினேன். நான் ஓப்பனிங் பவுலர், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என ஆல் - ரவுண்டராக திகழ்ந்தேன். வேகப்பந்து வீச்சாளரான நான் 8 விக்கெட்டுகள் எல்லாம் எடுத்துள்ளேன். அந்த அணிக்காக நிறைய சாதனைகள் படைத்துள்ளேன். அதேபோல் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டெல்லாம் விளையாடுவேன்.
அப்ப சம்பாதித்ததில் கொஞ்சம் சேர்த்து வைத்தது எல்லாம் இப்போது தேவைக்கு இருக்கிறது. நடிகர் விவேக்கை நான் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தேன். அப்போ விவேக் கோவையில் இருந்தார். மயிலாப்பூரில் உள்ள சபா ஒன்றில் நாடகங்கள் நடைபெற்றது. அதற்கு இயக்குநர் பாலசந்தர் வந்தார். கோவையில் இருந்து வந்த நாடக்குழுவில் விவேக் இருந்தார். அந்த நேரம் நான் சினிமாவில் நடிக்க தொடங்கியிருந்தேன். என்னுடன் இருந்த புரொடக்ஷன்ஸ் மேனேஜர் விவேக்கிற்கு சினிமா வாய்ப்புக்காக பரிந்துரைக்க சொன்னார்.
ஆனால் அந்த மேனேஜரே அடுத்த நாள் கே.பாலசந்தரிடம் அழைத்து சென்று விவேக்கை அறிமுகம் செய்தார். விவேக்கும் சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக பண்ணுவார். இருவரும் சேர்ந்து சில படங்கள் பண்ணினோம். வயதில் மூத்தவராக இருந்தாலும் ஜாலியாக தான் கூப்பிடுவார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Actor Yogi Babu: “தப்ப தட்டிக்கேட்டா என்னையே தப்பா பேசுறாங்க” - நடிகர் யோகிபாபு வேதனை