நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் எப்போது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


ரசிகர்களை கவர்ந்த சந்திரமுகி  


கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினித், மாளவிகா  என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில்  வெளியான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி தென்னிந்திய சினிமாவில் 800 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரும் சாதனை  படைத்தது. இதனிடையே இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார்.


பார்ட் -2 அறிவிப்பு 


அதன் அடுத்தக் கட்டமாக கடந்தாண்டு சந்திரமுகி-2 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  பி.வாசு இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 2 ஆம் பாகம் முதல் பாகத்தை போல இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. 


தொடர்ந்து சந்திரமுகியாக ஜோதிகாவுக்கு நிகராக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அந்த கேரக்டரில் கங்கனா ரணாவத் நடிக்கிறார் என சந்திரமுகி 2  படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். 


சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி சந்திரமுகி-2 படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்றாற்போல் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில், தனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என தெரிவித்துள்ளார். 


இயக்குநர் வாசு இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் என்று தெரிந்ததும் நான் பி.வாசுவிடம் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று முடிவு செய்து விட்டீர்களா என விசாரித்தேன்.  அப்போது என்னை ஆடிஷன் செய்ய விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் படத்தின் முதல் பாகத்திற்கும் அதன் தொடர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 


மேலும் சந்திரமுகி முதல் பாகத்தில் இடம் பெற்ற பாம்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். நானும் தனக்கும் பாம்பு தொடர்பான கேள்விகள் இருந்ததை இயக்குநரிடம் கேட்டேன். அந்த சீக்ரெட்டை ​​படத்தின் மூன்றாம் பாகத்தில்தான் அதை வெளிப்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்திரமுகி 2 படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.