80ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த திறமையான நடிகை ரேவதி. ஏராளமான நல்ல படங்களில் நடித்துள்ள ரேவதி, வெற்றிகர இயக்குநராகவும் வலம் வருகிறார். முன்னதாக பிரபல தனியார் நிகழ்ச்சியான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை ரேவதி அவரின் திரைப்பயணம் மற்றும் திரை வாழ்வு குறித்து மனம் திறந்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



”பாரதிராஜா சார் ஆக்ட்டிங் ஸ்கூலில் தான் படித்தேன், வளர்ந்தேன். அவர் தான் என்னை 'மண் வாசனை' படம் மூலம் சினிமா உலகிற்குள் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு ஒரு டிப்ளமோ படிச்சா பீல் கொடுத்தது பாலசந்தர் சார். அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்றால் எந்த  ஒரு டயலாக்கும் நேருக்கு நேர் பார்த்து பேசுவது போல அமைக்க மாட்டார். யதார்த்தமாக எப்படி வீட்டில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோமோ அப்படி தான் இருக்கும். அதைக் கற்றுக்கொடுத்தது பாலச்சந்தர் சார் தான். 


  'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் என்னுடைய டான்ஸ் திறமை கொஞ்சமாக வெளிப்பட்டாலும். புன்னகை மன்னன் படத்தில் தான் முழுக்க முழுக்க என்னுடைய டான்ஸ் திறமை வெளியில் வந்தது. “உனக்கு டான்ஸ் தெரியும் எனக் கேள்விப்பட்டு இருக்கேன் நான் பார்க்கலாமா?” எனக் கேட்டு என்னை ஆடிக் காண்பிக்க சொன்னார் பாலச்சந்தர் சார். கவிதை கேளுங்கள்... பாடலுக்கு பிருந்தா தான் என்னை ட்ரெயின் பண்ணாங்க. 


 



 


கமல் சார் ஒரு அருமையான டான்சர் என்பது நம்ம எல்லாருக்குமே தெரியும். அவரோட ஆட எனக்கு ரொம்ப பதட்டமா இருந்துது. “எனக்குத் தெரியாது, அவருக்கு சரிசமமா நான் ஆடணும். நீ தான் என்னை அப்படி ட்ரெயின் பண்ணனும்” என பிருந்தா கிட்ட நான் சொல்லிட்டேன். எனக்கு எக்ஸ்ட்ராவா ட்ரெயினிங் கொடுக்க சொன்னேன்.  ஒரு மூன்று நாட்கள் முன்னாடியே நாங்க ப்ராக்டிஸ் ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் தான் கமல் சார் கேள்விப்பட்டு வந்து ஜாயின் பண்ணிகிட்டாரு. 


சினிமாவில் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்து இருக்கானா, இல்லை என்று தான் சொல்லணும். அதை எல்லாம் தாண்டி வந்தாச்சு. அதனால நான் அதைப் பத்தி பேசுறது கிடையாது. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் இப்பகூட நினச்சு வருத்தப்படுவேன். நான் ஒரு நாலு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி இருக்கணும். இன்னும் கொஞ்ச நல்ல நல்ல படங்கள் பண்ணதுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணி இருக்கலாம். அந்த சமயத்துல தான் புன்னகை மன்னன், மௌன ராகம் படங்கள் பண்ணேன். 17 வயசுல நடிக்க வந்தேன் 20 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 


ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் பிரேக் எடுத்ததுக்கு அப்புறம்கூட கிழக்கு வாசல், தேவர் மகன் மாதிரி நல்ல படங்களில் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இருந்தாலும் இப்போ இருக்குற மாதிரி கரியர் சார்ந்த படங்களில் நடிக்க அப்போ எங்களுக்கு வாய்ப்பு கிடைவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது” எனப் பேசியுள்ளார் ரேவதி.