Surya 46 Director: தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த வெங்கி அட்லூரி, லக்கி பாஸ்கர் திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 - இயக்குனர் அறிவிப்பு:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்று பேசினார். அப்போது, ரெட்ரோவிற்கு அடுத்தபடியாக தான் நடிக்க உள்ள படத்தை, தெலுங்கு திரையுலகில் பிரபலமான வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா ”லக்கி பாஸ்கர்” ஆவாரா?
வெங்கி அட்லூரி இயக்கிய தனிஷின் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் தேசிய அளவில் பெரிய ஹிட் அடித்து கவனம் ஈர்த்தது. இந்நிலையில் தான் பல ஆண்டுகளாக தியேட்டரில் படத்தை வெளியிட்டு ஹிட் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் சூர்யா உடன், வெங்கி அட்லூரி கைகோர்த்துள்ளார். இதனால், சூர்யா 46 மீதான படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது சூர்யா 46 திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
கதாநாயகி யார்?
படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில், பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் கிங்டம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.