Retro Surya: ரெட்ரோ படநிகழ்ச்சியில் சூர்யா பற்றிய அவரது தந்தை சிவக்குமார் பேசிய கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிவக்குமார் பேச்சு:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெலியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் விழா நடந்தேறியது. அதில் பேசிய நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், “உடலை போட்டு வறுத்தி, பிழிந்து சிக்ஸ் வைத்தவர்கள் யார் இருக்கிறார்கள். நான் மிகவும் தாழ்மையுடன் சொல்கிறேன் சூர்யாவிற்கு முன்பாக சிக்ஸ் பேக் வைத்த தமிழ் நடிகர்கள் யார் இருக்கின்றனர்? அதற்கு பிறகாவது யாராவது செய்து இருக்கிறார்கள? அப்படியான கடினமான நடிப்பால் தான் மகத்தான நடிகராக சூர்யா உருவாகி இருக்கிறார்” என சிவக்குமார் பாராட்டினார்.
படம் பார்ப்பதே இல்லையா?
ஏற்கனவே பல மேடைகளில் பேசும்போது நான் படம்பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது சூர்யாவிற்கு முன்னும்,பின்னும் தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்தவர்கள் யாரும் இல்லை என சிவக்குமார் பேசியிருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் தான் சூர்யா முதல்முறையாக தனது சிக்ஸ் பேக் உடலை காட்சிப்படுத்தினார். ஆனல, அவருக்கு முன்பே பல கடும் உழைப்பாளிகள் தமிழ் சினிமாவில் இருப்பதாகவும், பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் கூட தங்களது சிக்ஸ்பேக் பொருந்திய கட்டுடலை காட்சிப்படுத்தியுள்ளதகாவும் குறிப்பிடுகின்றனர்.
அர்ஜுன்,விக்ரம், தனுஷ்..!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என வர்ணிக்கப்படும் அர்ஜுன், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அவர் தனது இளம் வயதிலேயே உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி சிக்ஸ் பேக் வைத்திருந்த பல புகைப்படங்களை இணையத்திலேயே காணலாம். விக்ரம் நடிப்பில் 2001ம் ஆண்டு உருவான தில் மற்றும் 2005ம் ஆண்டு வெளியான அந்நியன் படத்திலேயே கட்டுமதானசிக்ஸ் பேக் உடலை காட்டி ஆச்சரியப்படுத்தினார். ஒல்லி நடிகர் எனப்படும் தனேஷே 2007ம் ஆண்டு தனது நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் காட்டி மிரட்டியிருப்பார். வாரணம் ஆயிரம் வெளியான 2008ம் ஆண்டிலேயே வெளியான, விஷாலின் சத்யம் திரைப்படத்தில் அவர் கட்டுடலை காட்டி பலரையும் மிரளச் செய்தார். ஸ்டண்ட் மாஸ்டரான மொட்டை ராஜேந்திரன் எல்லாம், பல காலங்களாக சிக்ஸ் பேக்குடன் தான் வலம் வருகிறார்.
புதிய தலைமுறை ஹீரோக்கள்
சூர்யாவிற்கு பிறகு கூட யாரும் சிக்ஸ் பேக் வைத்ததில்லை என சிவக்குமார், ரெட்ரோ பட நிகழ்ச்சியில் பேசினார். ஆனால், இன்றைய தலைமுறை நாயகர்கள் கட்டுமஸ்தான உடல் என்பதை அடிப்படை தகுதியாக கொண்டுள்ளனர். பரத், சூரி, சிவகார்த்திகேயன், அருண் விஜய் என பல நடிகர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடக்கி வாசிக்கலாமே..!
சூர்யா ஒரு திறமையான நடிகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரது படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில், சூர்யாவை பாராட்டுவதாக சிலர் பேசுவது சர்ச்சையாகவும், அபத்தமாகவும் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கங்குவா படம் அதற்கு சிறந்த உதாரணம். சூர்யாவை பாராட்டலாம். அதற்காக மற்ற நாயகர்களை மட்டம்தட்டி பேசுவது, இல்லாததை எல்லாம் ஓவர் பில்டப் ஏத்தி விடுவதை எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்பதே ரசிகர்களின் வலியுறுத்தலாக உள்ளது.