நடிகர் விமல் நடித்து வெளியாகவுள்ள குலசாமி படத்தில் ஓய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் நடிகராக அறிமுகமாகிறார். 


சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல், 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு வெளியான “களவாணி” படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் ரசிகர்களால் அன்பாக கேலக்ஸி ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 


இதனிடையே விமல் நடிப்பில் அடுத்ததாக குலசாமி படம் வெளியாக உள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  நாயகன், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரவண சக்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் வசனங்களை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ள குலசாமி படத்தின் மூலம் பின்னணி பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதனிடையே குலசாமி  படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட்டது.  இதனை நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.


ஒரு நேர்காணல் 2 படங்களை இயக்கிய நிலையில், நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமான நான்  மீண்டும் படம் இயக்க விஜய் சேதுபதி தான் காரணம் தான் என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில், குலசாமி படத்தின் மூலம் மக்களிடம் பிரபலமான ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதனை வரவேற்கும் வண்ணம் விமல் மற்றும் ஜாங்கிட் இருக்கும் பேனர்கள் தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பான போட்டோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜாங்கிட் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நான்  நடித்துள்ள குலசாமி படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அப்பாவி சிறுமிகளுக்கு நடக்கும் தொல்லைகளையும், அவர்களை போலீஸ் எப்படி காப்பாற்றுகிறது என்பதையும் பற்றிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் தயாராகி உள்ளது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.


முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் தான் தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுத்தவர். அவரது இந்த கதை தான் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் படமாக வந்தது. இதில் ஜாங்கிட் வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.