90-களின் பிரபல நடிகர் நெப்போலியன், நடிகர் கார்த்தியைப் பாராட்டி பேசியுள்ள வார்த்தைகள் கார்த்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிராஜாவால் அறிமுகம்
1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993-இல் சூப்பர் ஹிட் படமான ’சீவலப்பேரி பாண்டி’யில் ஹீரோவாகி, தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
ஹாலிவுட் எண்ட்ரீ
மேலும் கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
நெப்போலியன் தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்துள்ளார். இந்நிலையில் முன்னதாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன், கார்த்தி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றைக் கூறி அவரை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
கார்த்தியின் நாகரீகமான பழக்கம்
சுல்தான் படத்தில் தான் கார்த்தியுடன் பணியாற்றியபோது நடந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி நினைவுகூர்ந்த நெப்போலியன், ”அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, டப்பிங் பேசி விட்டு அன்று இரவு ஹோட்டலில் இருந்து ஊருக்கு செல்ல நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது கார்த்தி நான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து படத்தில் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து, என்னை வழி அனுப்பி வைத்து விட்டுத்தான் சென்றார்.
இந்த நாகரீகமான பழக்கத்தை கார்த்தியை தவிர வேறு எந்த நடிகரிடமும் நான் இன்று வரை பார்த்ததில்லை” எனப் பாராட்டியுள்ளார்.
கார்த்தி குறித்த நெப்போலியனின் இந்த வார்த்தைகள் கார்த்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது குறித்து வீடியோவில் காமண்ட் செய்து நெப்போலியனை பாராட்டி வருகின்றனர்.
நடிகர் நெப்போலியன் சினிமா தாண்டி, தொழிலதிபர், அரசியல் தலைவர், சமூக ஆர்வலர் என பல துறைகளிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.