கட்டுரையாளர்கள்:  பேராசிரியர் சுந்தர் காளி - பரிமளா சுந்தர்

  


காலமான நடிகை மனோரமா ஆயிரத்து முந்நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், நீண்டகாலமாகத் தனக்கு நிகரான வேறு நடிகை யாரும் இல்லாத ஓர் இடத்தைத் திரையுலகில் பெற்றிருந்தார் என்பதும் அனைவராலும் புள்ளிவிவரங்களாக முன்வைக்கப்படுகின்றன.


மனோரமாவின் நடிப்புத்திறமையும் தொழில் ஈடுபாடும் கேள்விக்கிடமில்லாதவை எனினும் மேற்படி புள்ளி விவரங்கள் ஒரு வினாவை எழுப்புகின்றன. அது தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகைகள் பற்றாக்குறை பற்றியது. அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம், பி.எஸ்.ஞானம், மங்களம் எம்.எஸ்.சுந்தரிபாய் டி.பி.முத்துலட்சுமி. எம்.சரோஜா போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலரே மனோரமாவுக்குமுன் நகைச்சுவை நடிகைகளாக அறியப்பட்டிருந்தவர்கள். இவர்களில் அங்கமுத்து மட்டுமே முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மெனைப்படக் காலத்திலிருந்து நடித்துவந்த இவர் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் திரையுலகிலிருந்தவர்.


 



நடிகை - அங்கமுத்து 


மனோரமாவின் காலத்திலும் அவருக்குப் பின்னும்கூட நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? நகைச்சுவை நடிகைகளுக்கென்றே தனிப்பட்ட தகுதிப்பாடுகள் எவற்றையும் தமிழ்த் திரைப்படம் வேண்டுகிறதா அவ்வாறெனில் அவை யாவை?


தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்பது மூன்றுவிதங்களில் அமையலாம்


1. படத்தின் மையக்கதை முதன்மைக் கதைப்பின்னலின் ஊடாகக் கூறப்பட, நகைச்சுவை அதைச் சார்ந்தும் சாராமலும் அமைகிற ஒரு துணைக்கதைப் பின்னலில் தனியே அமையும். மெயின் டிராக் எனப்படும் முதன்மைக் கதை தனியோர் எழுத்தாளரால் எழுதப்பட, காமெடி டிராக் எனப்படும் துணைக்கதை வேறு ஒருவரால் எழுதப்படும். சிலசமயம் படத்தின் நகைச்சுவை நடிகரே தனக்கான இந்நகைச்சுவைப் பகுதியை எழுதக்கூடும். தமிழ்த் திரைப்படம் பேச ஆரம்பித்த 1990களிலிருந்தே இந்நடைமுறை வழக்கிலிருக்கிறது.


2. நகைச்சுவை நடிகர் கதைநாயகனின் தோழனாகவோ, வேறொரு துணைமாந்தராகவோ வேடமேற்கும் சில படங்களில் நகைச்சுவைப் பகுதி சிலசமயம் முதன்மைக்கதையுடன் பின்னிப்பிணைந்திருக்கும். இத்தகைய படங்களில் ஒருவகையாகக் கதைநாயகனே நகைச்சுவை வெளிப்பாட்டை மேற்கொள்ளும் படங்களைச் சுட்டலாம் 


3. நகைச்சுவை நடிகரே கதைத்தலைவனாக வேடமேற்கும் முழுநீள நகைச்சுவைப்படங்கள் பிறிதொரு வகையைச் சார்ந்தவை. 1990களிலும் 1940களிலும் துண்டுப்படங்களாகச் சிற்றளவில் எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படங்களிலிருந்து வடிவேலுவின் இம்சைஅரசன் 23ஆம்புலிகேசி போன்ற முழுநீளப் படங்கள்வரை இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. 


இம்மூன்று வகைப்படங்களில் முதல்வகைப் படங்களின் அமைப்புமுறை குறிப்பிடத்தக்கது. இப்படங்களில் நகைச்சுவைத் துணைக்கதை முதன்மைக் கதைக்கு இணையாக அமையும்படி கோக்கப்பட்டிருக்கும். தனியோர் எழுத்தாளரால் எழுதப்பட்டபோதிலும் அது முதன்மைக் கதையிலிருந்து முற்றிலும் விலகியதாய் இராது. முதன்மைக் கதைக்கும் நகைச்சுவைப் பகுதிக்கும் இடையிலான கதைகூறல் பொதுத்தன்மைகளும் இணைநிலைகளும் இத்தகைய திரைப்படங்களின் கதையாக்கத்தில் அமையக்காணலாம்.


இங்கு, முதன்மைக் கதையின் எதிரொலி அதன் தலைகீழான வடிவத்தில், பெரும்பாலும் பகடியாக நகைச்சுவைப் பகுதியில் இடம்பெறுகிறது. எடுத்துக்காட்டாக, பட்டிக்காடா பட்டணமா என்ற படத்தில்,  படித்த நகரம் சார்ந்த (அதனால் 'திமிரான') கதைநாயகியை அடக்கி வசக்குவதே முதன்மைக் கதையில் மையப்புள்ளியெனில், நகைச்சுவைத் துணைக்கதையோ அதற்கு நேர்மாறாக நகர மோகம் கொண்டலையும் கணவனை அவன் மனைவி அடக்கி வசக்கித் திருத்துவதாக அமைகிறது. ஏராளமான படங்களில் காணப்படுகிற இத்தகைய இணைநிலைக் கதையமைப்பு ஒருவிதத்தில் முதன்மைக் கதையின் தீவிரத்தன்மையை ஈடுகட்டும் பகடிக்கு இடமளிக்கிறது எனலாம். 


 


 





 


இனி மேற்படி பட்டிக்காடா பட்டணமா படத்தில் மனோரமா ஏற்று நடிக்கும் தாட்டியமான நகைச்சுவை நடிகைகளுக்கே உரிய வகைமாதிரியான கதைமாந்தர் வார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, தில்லானா மோகணாம்பாள், நடிகன், சின்னக்கவுண்டர் பாட்டி சொல்லைத் தட்டாதே முதலிய ஏராளமான படங்களில் மனோரமா இத்தகைய பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வில்லன்களில் ஒருவனான நாகலிங்கத்தால் வஞ்சிக்கப்படும் பெண்ணமான ரமாமணி மனோரமா), மோகனாவை (பத்மினி) அவன் பிடியிலிருந்து காப்பாற்றியதற்காக அவன் தன்னைக் கொல்ல முயலும்போது அவனிடமிருந்து தப்பித்து ஒரு நாடகக் கம்பெனியை நடத்துவது மட்டுமின்றி அதில் ஆண்வேடமான கள்ளபார்ட் என்ற பாத்திரத்தில் நடிப்பவளாகவும் மாறுகிறாள்.


தமிழ்த் திரைப்படக் கதையாடல்களில் கதைநாயகிப் பாத்திரவார்ப்பில் பெரிதும் நாம் காணும் நளினம் அவ்வேடமேற்கும் நடிகையின் உடலில் தோன்றும் ஒயில் அல்லது ஓய்யார்த்தினால் விளைவது. கதைநாயகியின் தோற்றம், நிலை, சைகை, நகர்வு, நடன,அசைவு இவை அனைத்திலும் காணும் மேற்படி ஓய்யாரத்திற்கு மாறாக நகைச்சுவை நடிகையின் உடல் ஒருவித நிமிர்வினால் மேற்படி தாட்டியத்தைப் பெறுகிறது. வில்லன் உடலில் தோன்றும் மெய்ப்பாடான விறைப்பு அல்லது விடைப்பிலிருந்து வேறுபட்ட ஒருவித நேர்நிலை இது.  கதைமாந்தர் மனவுணர்வும் அது உடலில் ஏற்படுத்தும் விறல் அல்லது சத்துவமும் மெய்ப்பாடாகும். தொல்காப்பியர் இதுதொடர்பாக மெய்ந்திறுத்தல் என்கிற சொல்லாட்சியையும் பயன்படுத்துகிறார்.  எனவே, நகைச்சுவை நடிகையின் தாட்டியம் என்பது மனவுணர்வான தாட்டியத்தை உடம்பில் நிறுத்தி வெளிப்படுத்துவதாகும். தாட்டியத்தை மனவுணர்வு என்றால், நிமிர்வை அதன் உடல்வெளிப்பாடு எனலாம். நிமிர்தல் என்பதும் உடலின் நேர்நிலை என்ற பொருளைத் தருவதோடு, அதன் நீட்சியாக உறுதியாயிருத்தல், துணிவாயிருத்தல், செம்மாந்திருத்தல் ஆகிய பொருள்களையும் தருகிறது. அகநானூறு 359ஆம்பாடலிலும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையிலும் பயின்றுவரும் செந்நிலை என்கிற சொல்லாட்சி மேற்படி மெய்ப்பாட்டோடு இயைபுடையது. 


நகைச்சுவை நடிகையின் உடற்கோலத்தில் காணும் மேற்படி நிமிர்வு கதாநாயகி-உடலின் ஒய்யாரத்திற்கும் அதிலிருந்து விளையும் நளினத்திற்கும் ஒருவிதத்தில் மறுதலையாக அமைகிறதெனில், இன்னொருபுறம், இன்னொருவிதத்தில், நகைச்சுவை நடிகனின் உடல்குழைவும் நெகிழ்வும் மிகுந்த ஓசிந்த உடலாய்த் தோற்றங்கொள்ளுவதைச் சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜனிலிருந்து வடிவேலுவரை பலரிடம் காணமுடியும். நகைச்சுவை நடிகன் பெண்வேடமிடும் படங்களில் இத்தகைய ஓசிவு இன்னொரு பரிமாணத்தையும் பெறுகிறது. அதாவது. இங்கு பெண்ஆண் என்கிற பாலின வேறுபாட்டின் திடத்தன்மையும் எதிர்ப்பாலின ஈடுபாடும் தடுமாற்றத்திற்குள்ளாகின்றன. இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகப் பாட்டரளி படத்தில் வடிவேலு பெண்வேடத்தில் தோன்றும் காட்சிகளைக் குறிப்பிடலாம். இப்படத்தில் ஒரு காட்சியில் வடிவேலுவும் கோவை. சரளாவும் சண்டையிடும்போது சரளா, "பாக்குறதுக்கு நான் பொம்பள. ஆனா, நெஜத்துல ஆம்பள என்பதும் இக்கட்டுரையின் சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது. 




 தாட்டியமான பெண்ணுடலுக்கும் ஒசிந்த ஆண்டலுக்கும் இடையிலான எதிர்வு தமிழ்த் திரைப்படக் கதையாடல்களின் நகைச்சுவைப் பகுதிகளில் இவ்வாறு தாட்டியமான பெண் கதைமாந்தர் சித்திரிப்புகளுக்கு இட்டுச்சென்றிருக்கிறது. திரைப்படத்திற்கு முந்திய கூத்துமரபுகளிலேயே இத்தகைய பெண் நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு முன்னுதாரணம் இருந்தபோதிலும், அங்கு அது சிறுசிறு நகைச்சுவைக் காட்சிகளுக்குள் சுருங்கிவிடுவதையும், இங்கு இது கதையாடலின் முழுநீளத் தளத்தில் விரித்துரைக்கப்படுவதையும் காணலாம்


மேலும், நிமிர்வு அல்லது செந்நிலை என்ற மெய்ப்பாடு நகைச்சுவை நடிகையின் உடலில் தோன்றுவது அவ்வுடலில் ஏற்படும் ஒருவித ஆணிமையேற்றத்தின் விளைவாகவே. இதற்கு மறுதலையாக ஆண் நகைச்சுவை நடிகர்களின் உடல் ஒருவிதப் பெண்மையேற்றத்தின் காரணமாகவே மேற்படி நெகிழ்வையும் ஓசிவையும் பெறுகிறது எனலாம்! இந்த ஆண்மையேற்றம் மற்றும் பெண்மையேற்றம் அந்தந்த நடிகைநடிகனையும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அந்தந்தக் காலக்கட்டத்தையும் பொறுத்து வெவ்வேறாய் அமையினும்,


நடிகனின்/ நடிகையின் உடலில் சில பொதுக் கோலங்களை இவை சாத்தியப்படுத்துகின்றன. ஓர் ஆண்மையக் கதையாடல்கள் உருப்பெறும் சூழலில், நடிகைகள் தங்கள் உளத்திலும் உடலிலும் மேற்படி ஆண்மையேற்றத்தைச் சரிவரவும் ச்சுஜமாகவும் உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்துவதென்பது அரிய செயலாக எண்ணிக்கை அன்றும் இன்றும் குறைவாக இருக்கிறது.


ஆணாதிக்கத் திரையுலகில், பெரிதும் இருப்பதாலேயே தமிழில் நகைச்சுவை நடிகைகளின் ஆண்களுக்குச் சரிக்குச்சரி நிற்பவர்களாகவும், சளைக்காதவர்களாகவும் படைக்கப்படும் பாத்திரங்களை ஏற்று நடிக்கிற நகைச்சுவை நடிகைகள் பின்னாளில் வில்லத்தனமான மாமியார், நாத்தனார், மாற்றாந்தாய் வேடங்களில் நடிக்கப்புகுவது மேற்படி ஆண்மையேற்றம் அவர்களுக்கு வழங்கும் திறனின் அடிப்படையிலேயே ஆகும்.


மனோரமாவைப் பொறுத்தவரை, அவர் அத்தகைய எதிர்நிலைக் கதைமாந்தர்களாகவன்றி நேர்நிலைப் பாத்திரங்களையும் ஏற்று நீண்டகாலம் நடித்தார். நட்சத்திர அந்தஸ்தோ, ரசிகர்மன்றங்களோ இல்லாத அவர், திரையுலகிலும் அதற்கு வெளியிலும் எல்லாத் தரப்பினராலும் விரும்பப்பட்டார் அவரது நெடிய திரைவாழ்வு பன்முகப்பட்டதோர் அரிய கலைஞரின் நிமிர்ந்த பயணம்.