‘மனமோகன லாவண்யத்திற்கு மற்றொரு பெயர் அஞ்சலி;


அதி அற்புத சௌந்தர்யத்திற்கு இன்னொரு பெயர் அஞ்சலி.


அழகு பிறரது தூண்டுகோல் இல்லாமல் தானே சூட்டிக் கொண்ட பெயர் அஞ்சலி;


படவுலகில் இவள் மாயக்காரி; மயக்குக்காரி; சிங்காரி; சொப்பன சுந்தரி’.


 –  இப்படியெல்லாம் அஞ்சலிதேவி பற்றி வர்ணித்து, 1951ல் எழுதியவர் பிரபல சினிமாப் பத்திரிகையாளர் நவீனன்.தென்னிந்திய சினிமாக்களின் 1950 ஆம் காலக்கட்டங்களில் திரையுலகை ஆட்டிப்படைத்தவர் பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி.  நடிப்பு அதற்கேற்ற நளினம், பாவனைகள் , அழகு என அக்காலத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் அஞ்சலி தேதி. 




பிறப்பும் நடிப்பும்!


1927 ஆம் ஆண்டு .ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் அஞ்சனி குமாராக பிறந்தவர் அஞ்சலி தேவி. பெற்றோர்  நூக்கையா-சத்யவதி. 1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். புகழ்பெற்ற இயக்குநர் எல்.வி பிரசாத் தான் எடுத்த 'கஷ்ட ஜீவி'  என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இவரை நாயகியாக அறிமுகப்படுத்த அந்த படம் பல்வேறு காரணங்களால் முழுமையடையாமல் பாதியிலேயே நின்று போனது. அதன் பிறகு மீண்டு தான் நடித்து வந்த நாடக துறைகே திரும்பிய அஞ்சலி தேவியை  சி. புல்லையா கொல்லபாமா என்னும் திரைப்படம் மூலம் மீண்டும் சினிமா துறைக்கே அழைத்து வந்தார். புல்லையாதான் அன்சனி தேவி என்ற பெயரை அஞ்சலி தேவியாக மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




திருமணமும் நடிப்பும்! 


1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆதிநாராயணாராவ் அஞ்சலி தேவிக்கு 13 வயது இருக்கும் பொழுதே பழக்கம் . அஞ்சலி தேவியின் நடிப்பு திறனுக்கு மயங்காதார் உண்டோ! அதில் ஆதிநாராயண ராவ் மட்டும் விதி விலக்கா. பல மேடை நாகங்களில் தன் இசையில் நடிக்க அஞ்சலி தேவியை பரிந்துரை செய்திருக்கிறார் ஆதிநாராயணன். இப்படியே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.1943ல் இரண்டாம் உலகப்போர் பிரச்சார நிதிக்காக கவர்னர் ஹோப் தலைமையில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியின் மூலம் பதினாறு வயது அஞ்சலி தேவி சென்னை நகர மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.  அதன் பிறகு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் குவிய , அவர் தனது கணவனுடன் சென்னைக்கு குடியேறுகிறார். திருமணம் ஆகிவிட்டால்  இன்றளவும் குணச்சித்திர வேடங்களுக்கு தள்ளப்படும் நாயகிகளுக்கு மத்தியில் , குழந்தை பிறந்தும் படு பிஸியாக டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார் அஞ்சலி தேவி.


கனவு கன்னி :


”அஞ்சலி தேவினு ஒரு நடிகை இருந்தாங்க....அட அட என்னா... அழகு, என்னா.. நடிப்பு..ம்ம்ம்ம்ம் ” என நம் வீட்டு தாத்தாக்கள் இன்றும் பெருமூச்சு விட கேட்டிருப்போம். அந்த அளவுக்கு 1950 ஆம் காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார் அஞ்சலி தேவி. 





முதல் கலர் சினிமா நாயகி!


எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என அப்போது முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முதல் சாய்ஸ் அஞ்சலி தேவிதான்.இவர்களுடன் இணைந்து  தமிழ், தெலுங்கு, இந்தி ,, கன்னடம்  என 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கன்னட சினிமாக்கள் மட்டும் 300 க்கு மேல் இருக்குமாம்.  தெலுங்கில் 1963 ஆம் ஆண்டு வெளியான லவகுசா திரைப்படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்தான் தெலுங்கில் வெளியான முதல் கலர் திரைப்படம் . இந்த படத்தில் சீதாவாக நடித்திருந்தார் அஞ்சலி தேவி , அவரை இன்றளவும் மக்கள் சீதா தேவியாக நினைத்து சிலர் வழிப்படுவதாக நடிகை  சௌக்கார் ஜானகி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.




அஞ்சலியும் தமிழ் சினிமாவும்!


சொர்க்க வாசல்’ படத்தில் பேரறிஞர் அண்ணாதுரையின் அழகு கொஞ்சும் தமிழ் வசனங்களையும் பேசி நடித்திருக்கிறார்.1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் என்னும் திரைப்படம் அஞ்சலி தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.  குறிப்பாக அக்காலத்து பெண்களை கண்ணீரில் கரைய வைத்த திரைப்படம். அதே போல 1957 ஆம் ஆண்டு வெளிவந்த மணாளனே மங்கையின் பாக்கியம் என்னும் திரைப்படமும், அதன் பின்னர் வெளியான காலம் மாறிப்போச்சு திரைப்படமும் ஜெமினி கணேசன் , அஞ்சலி தேவி காம்போவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.அதே போல சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  என்னதான் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் அதிக படங்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடனே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 60களின் கதாநாயகி என்ற நிலையிலிருந்து அடுத்த நிலையாக ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் அம்மாவாக நடித்திருந்தார். 




தயாரிப்பாளர் அஞ்சலி தேவி:


சிரிப்பு , அழுகை, குறும்பு , வீரம், கோபம் என நவரசங்களையும் தனது படங்களில் விருந்து படைத்த நாயகி அஞ்சலி தேவி நடிகையாக மட்டுமல்லாமல் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 1950 களில் பல ஆண்களுக்கு போட்டியாக களமிறங்கிய பெண் தயாரிப்பாளர் அஞ்சலி தேவி என்ற பெருமையும் அவருக்கு உண்டு . முதன் முதலாக சிவாஜி கணேசன் நடிப்பில் படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம் அஞ்சலி தேவி .  ‘பூங்கோதை’  என்னும் பெயரிடப்பட்ட அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் , சிவாஜி நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் வெளியானதால் , பூங்கோதை திரைப்படம் வெற்றிபெறவில்லை.  அந்த திரைப்படத்திற்காக அஞ்சலி தேவி கொடுத்டஹ் அட்வான்ஸ் தொகையை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தாராம் சிவாஜி. மேலும் அஞ்சலி தேவியை முதலாளி என்றுதான் கூப்பிடுவாராம் சிவாஜி. பல நடிகைகளை தனது தயாரிப்பில் அறிமுகம் செய்த அஞ்சலி தேவி தயாரிப்பாளராக வெற்றி பெற முடியவில்லை . அஞ்சலி ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் 27 சொந்தப் படங்களையும் தயாரித்தார். அவற்றில் ‘அனார்கலி’ ஃபிலிம்ஃபேர் விருதை அஞ்சலி தேவிக்குப் பெற்றுத் தந்தது.  படத்தை தயாரிப்பதற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து மீண்டு வந்தார் என்கின்றனர் சக நடிகைகள் .




அங்கீகாரம் :


பழம்பெரும் நடிகைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் அஞ்சலி தேவி நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்றிருக்கிறார். தெலுங்குப் படவுலகில் நீண்ட காலம் பணியாற்றியதற்காக 2005ம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருது பெற்றவர். அதுமட்டுமல்ல ஆண்கள் கோலோச்சிய தென்னிந்திய சினிமாவில் நடிகர் சங்கத்தில் தலைவியாக இருந்தும் கெத்து காட்டியவர். இவரை தவிர இன்றளவும் வேறு ஒருவர் கூட அந்த பொறுப்பை வகிக்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது. 1950-1960 ஆம் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அனுமதியுடன் நடிகர் சங்கத்தில் லோகோவை மாற்றிவர் அஞ்சலிதேவிதானாம் . 


 




இறுதிநாட்கள் :


கணவனின் மறைவுக்கு பிறகு துணிச்சல் மிக்கவராக வீறுநடை போட்ட அஞ்சலி தேவி , தனது80 வது வயது நிறைவை கொண்டாடினார். சதாபிஷேகம் என அழைக்கப்படும் அந்த விழாவானது கணவன் உயிருடன் இருந்தால் மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நடைமுறைக்குள் உள்ளது. ஆனால் அது அனைத்தையும் உடைத்தெரிந்த அஞ்சலி தேவி கணவனின் புகைப்படத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு தனக்கு தானே சதாபிஷேகம் செய்துக்கொண்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தனது 86 வயதில் உயிரிழந்தார். அஞ்சலி தேவி தனது வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும் அந்த காலத்திலும் ஆண்களுக்கு நிகரான வெற்றி பாதையில் பயணித்தவர். இன்று பல நடிகைகளுக்கும் முன்னோடியாக அஞ்சலி தேவி இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.