தூத்துக்குடியில் பிறந்த முத்து ஒன்று இன்று நம்மோடு இல்லை என்றாலும்  நமது நினைவுகளில் கலந்தே இருக்கிறது. தனது நகைச்சுவை மூலம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக் 61வது பிறந்தநாள் இன்று. 



 


சிகரம் கண்டெடுத்த சிற்பி :


இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் பட்டறையில் இருந்து வந்த இந்த கலைஞன் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்ப காலம் முதற்கொண்டே இவரின் நகைச்சுவை ட்ராக் என்றுமே பொதுமக்களின் நலனுக்காகவும், மூடநம்பிக்கை, ஊழல், லஞ்சம், மக்கள் தொகை என  பொதுவான விஷயம் குறித்து குரல் கொடுக்கும் வகையிலும் இருக்கும். 






ஒரு கோடி மரக்கன்றுகளே லட்சியமாய்:


சமூகம் மீது அக்கறை கொண்டிருந்த நடிகர் விவேக் அப்துல் கலாமை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு கிரீன் காலம் என்ற பெயரில் கோடி கணக்கில் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற ஒரு கொள்கையோடு 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவிட்டார். சமூக அக்கறையோடு இருந்த இந்த கலைஞன் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் மக்களிடைய பேசினார். அடுத்த நாளே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 


சிந்தனையாளர் விவேக் :


சாதி மதம் என எதற்குமே இடம் கொடுக்காத இந்த மாமனிதனுக்கு மனிதநேயம் மீதான நம்பிக்கை அதிகம். அதே போல கல்விக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் விவேக். நாம் நாட்டின் வளர்ச்சி குழந்தைகளின் கையில் தான் உள்ளது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு பலமுறை பள்ளி, கல்லூரிகளில் சொற்பொழிவாற்றி உள்ளார். இப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட விவேக் இன்றும் நம்மோடு இல்லை என்பதை நினைக்கையில் மனம் கனக்கத்தான் செய்கிறது.






சிரிக்கலாம் வாங்க :


அவரின் இறப்புக்கு பின்னர் தான் அமேசான் பிரைமில் வெளியானது LOL : எங்க சிரிங்க பார்ப்போம் நிகழ்ச்சி. அவர் நடித்த அரண்மனை 4 திரைப்படமும் அந்த சமயத்தில்தான் வெளியானது. அவர் இல்லை என்றாலும் அவரின் படம் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார் இந்த சின்ன கலைவாணர். காற்றோடு காற்றாக கலந்துள்ள இந்த தென்றலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.