திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களின் படங்களை மள மளவென வாங்கி வெளியிட்டு வருகிறார்.


ஒரு பெரிய திரைப்படம் வருகிறதென்றால், அதனை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கிவிட்டதா இல்லையா என்பது கேள்வியாக இருப்பது இல்லை. ரெட் ஜெயண்ட் எப்போது வாங்குகிறது என்பதுதான் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சிவகார்த்திகேயனின் டான் படத்தின் திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. உதயநிதி தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றி வருவதால் மற்ற தயாரிப்பாளர்கள் புலம்பி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.






இதனிடையே, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என்று உதயநிதி பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் முன்னதாக, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித்தின் வலிமை ஆகிய படங்களின் திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம், விஜய்யின் பீஸ்ட் படங்களின் திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் திரையரங்க உரிமைகளை கைப்பற்றியுள்ளது. இதனால், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் உதயநிதிதான் வாங்குகிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.






2021 முதல் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட திரைப்படங்கள்: 



  • அண்ணாத்த

  • அரண்மனை

  • எப்.ஐ.ஆர்

  • எதற்கும் துணிந்தவன்

  • ராதே ஷ்யாம்

  • காத்துவாக்குல ரெண்டு காதல்

  • பீஸ்ட்

  • விக்ரம்

  • டான்


இந்த நிலையில், மற்ற தயாரிப்பாளர்கள், முன்னணி ஹீரோக்கள் படங்களை எல்லாம் உதயநிதியே வாங்கினால், நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று புலம்பத் தொடங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உதயநிதி ஒரு சினிமா தயாரிப்பாளராக இந்த படங்களை வாங்கி வெளியிடுகிறார். அதுமட்டுமின்றி அவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகிறது என்ற சர்ச்சையும் உள்ளது. பீஸ்ட்டுடன் வெளியாகும் கேஜிஎஃப் சாப்டர் 2 விற்கு வெறும் 250 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்ததும் இவர்களின் சதி என்று சமுக வலைதளங்களில் வாதம் செய்கின்றனர் ரசிகர்கள். இதே போல, மற்ற நிறுவனங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட்டால் அப்போதும் இப்படி சொல்வார்களா என்று உதயநிதிக்கு ஆதரவான குரல்களும் எழுகின்றன. கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் இதே போல மாறன் சகோதரர்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியபோது எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அதே போல, இப்போது உதயநிதி மூலம் எழுவதாகக் கூறுகின்றனர். எப்படியாக இருந்தாலும், உதயநிதி மானாவரியாக படங்களை வளைத்துப்போடுவதால் சர்ச்சைகள் முளைவிட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.