எம் சரவணன்


எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவணம் ஈர்த்தவர் இயக்குநர் சரவணன். தொடர்ந்து இவன் வேற மாதிரி, வலியவன், ராங்கி உள்ளிட்டப் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் நாடு. தர்ஷன் மஹிமா நம்பியா, ஆர் எஸ் சிவாஜி  உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது  நாடு திரைப்படம். கொல்லி மலையில் நிகழ்ந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 


காத்துவாங்கும் திரையரங்குகள்


எவ்வளவு  நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்த போதிலும் போதுமான அளவு டிக்கெட் விற்பனை ஆகாத காரணத்தினால் இன்று சென்னையில் சில இடங்களில் ‘நாடு’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நாடு படத்துடன் இணைந்து வெளியான அன்னபூரணி, பார்க்கிங், மற்றும் அனிமல் ஆகியத் திரைப்படங்களின் மேல் ரசிகர்களின் கவணம் குவிந்திருப்பது இதற்கு முதல் காரணம். 


சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியானது கிடா படமும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட போதும் திரையரங்குகளில் இந்தப் படத்திற்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


என்ன காரணம்?


இப்படியான நிலை அவ்வப்போது ஒரு சில நல்ல படங்களுக்கு அமைகிறது. இதற்கு குறிப்பிட்ட ஒரு காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்களின் படங்களாக இருக்கின்றன. ஆச்சரியப்படும் வகையில் இந்த ஆண்டு அறிமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 


முறையான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று, மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெறும் படங்கள் நிச்சயமாக வெற்றி பெறுகின்றன. காதல், உறவுச் சிக்கல்கள், த்ரில்லர் என பெரும்பாலும் இந்தப் படங்கள் இன்றைய தலைமுறையினரை கவரும் கதைகளாகவும் இருப்பது ஒரு கூடுதல் பலம். இந்தக் கதைக்களத்தை தவிர்த்து வழக்கமான கமர்ஷியல் மீட்டரில் இருந்து சிறிது விலகி உருவாகும் படங்களுக்கு வெகுஜனத்திடம் மிகக் குறைவாக அல்லது தாமதமாகவே வரவேற்பு கிடைக்கின்றன. திரையரங்குகளில் இல்லையென்றாலும் ஓடிடி தளங்களில் வெளியான பின்பும் சில படங்கள் நன்றாக பாராட்டப்பட்டிருக்கின்றன.


அதுவரை திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படங்கள் கூட்டமில்லாமல் ஒரு சில காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. பெரிய அளவிலான வசூலையும் இந்தப் படங்கள் எடுப்பதில்லை. இது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ, அந்தப் படத்திற்கான பப்ளிசிட்டி பெரிதாக இருக்க வேண்டிய கட்டாயமும் அதிகரித்துள்ளது.