இளையராஜாவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி கடுமையாக சாடுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது தான் பிரச்னைக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஜேம்ஸ் வசந்தன்:
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதேநேரம், கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இசை கற்றுத்தரும் ஆசிரியராகவும் அவர் வேலை பார்த்தார். அந்த நேரத்தில் அவரிடம் படித்த சசிகுமாரின் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதைதொடர்ந்து, பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார்.
”இளையராஜா மட்டமான மனிதர்”
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது இளையராஜாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இளையராஜாவின் செயல்பாடுகளையும், பண்புகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை மட்டமான மனிதர் என கடுமையாக விமர்சித்து இருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சு கடும் சர்ச்சை ஆனது. பல தரப்பில் இருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.
ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்:
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் பேசிய இளையராஜா, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ரமண மகரிஷி ஒருவர் தான் இறந்து உயிர்த்தெழுந்தவர் என இளையராஜா அங்கு பேசினார். ஆன்மீக புரிதல் இல்லாமல் இளையராஜா இப்படி பேசியது தவறு. ஏசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்பும் போது அவர்களை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பிய ஜேம்ஸ் வசந்தன், அதன் காரணமாக தான் இளையராஜாவை மட்டமான மனிதர் என சொல்வதாக விமர்சித்து இருந்தார்.
இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்:
இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து இளையராஜாவை விமர்சித்து வருவது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமான சுப்பிரமணியபுரம் படத்தின் ஒரு காட்சியில் 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' என்ற இளையராஜாவின் பாடலை, எந்தவித அனுமதியும் பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜேம்ஸ் வசந்ததிற்கு இளையராஜா ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நிற்க வைத்து கேள்வி கேட்ட இளையராஜா?
நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தனை நேரில் அழைத்து, எனது அனுமதி இல்லாமல் எப்படி 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' எனும் எனது பாடலை பயன்படுத்தலாம் என நிற்கவைத்து இளையராஜா கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தான், இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.