சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் ட்ரைலர் அதாவது முன்னோட்டம் படக்குழுவால் இன்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னோட்டம் இணையத்தில் பரபரப்பை கிளப்பும் விதமாக அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், படத்தில் ஹைதராபாத் நிசாம், முகமது ஜின்னா மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரது கதாப்பாத்திரங்கள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. முன்னோட்டத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களான, ”இங்க மெஜாரிட்டியா இருக்கறது இந்து மக்கள்தான். அவங்க ஹிந்துஸ்தானைத்தான் விரும்புகின்றனர்”, “ ஒன்னு, அவங்க மதம் மாறனும் இல்லைனா நாட்டை விட்டு ஓடனும், மதம் மாறினா தோஸ்து, இல்லைனா துஸ்மன்”, “ இந்துக்களாக இருந்து பரதேசியா இருக்கீங்க, இஸ்லாத்துக்கு மாறி முதலாளியாகுங்க”, “ஓம்கார சத்தமே கேட்கக்கூடாது, காவி நிறமே தெரியக்கூடாது”, “ ஹைதராபாத்தை ஹிந்துஸ்தானுடன் இணைக்கலனா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்னு சர்தார் பட்டேல்ட்ட இருந்து கடிதாசி வந்திருக்கு”, “யுத்தம் பண்ணியாகனும், அந்த மத வெறியர்களுக்கு பாடம் புகட்டியே ஆகனும்”, ” ஹைதராபாத்தை இன்னொரு காஷ்மீரா மாற விடமாட்டேன்” போன்ற வசனங்கள் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்திய சினிமாவில் அவ்வப்போது வரலாற்றை மைய்யப்படுத்திய கற்பனை கலந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் பல படங்கள் வரலாற்றை வரலாறாகவும் பல படங்கள் வரலாற்றுடன் கற்பனையும் கலந்து படமாக்கப்பட்டுள்ளது. ஒரு சிலபடங்கள் வராற்றை அப்படியே பிரதிபலித்திருந்தாலும், சர்ச்சையில் இருந்து தப்பிக்க, இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது என டைட்டில் கார்டில் முன்னறிவிப்பை தெரிவித்துவிட்டே படத்தின் கதையை தொடங்குகின்றனர். பல படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்கள் கடும் விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்லும்போது, பாகிஸ்தானுடன் தங்களை இணைத்துக் கொள்வதாக ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் மற்றும் வங்காளம் ஆகியவை அறிவித்தது. இறுதியில் வங்காளம் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள, ஜம்மு காஷ்மீர் பிரச்னை இன்று வரை தீர்ந்தாக இல்லை. அதற்கு காரணம் இந்தியாவின் ஒரு எல்லையாக உள்ள ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானும், சீனாவும் உள்ளது. இந்த காரணங்களும் ஜம்மு காஷ்மீர் பிரச்னை இன்றுவரை புகைச்சலைக் கிளப்பிக் கொண்டு இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
ஆனால் இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத், பாகிஸ்தானுடன் தன்னை இணைத்துக் கொள்வதாகவும் இல்லை என்றால் தனி நாடாக இருந்து கொள்கின்றோம் என்று அன்றைக்கு ஹைதராபாத்தை தன் வசத்தில் வைத்திருந்த, நிசாம் தெரிவித்தார். நிசாமுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் பெரும் படையே திரண்டது. பிரச்னைக்கு தீர்வு காண மௌண்ட் பேட்டன் பிரபு ஓராண்டு அவகாசம் தந்தார். ஆனால் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்பட்ட வல்லபாய் பட்டேல் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க Operation Polo என்ற பெயரில் போர் நடத்தியது. இந்த போர் மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. இறுதியில் இந்தியாவுடன் ஹைதராபாத்தை இணைக்க ஹைதாராபாத் நிசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். இதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ரஸ்க்கார் திரைப்படம் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.