பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரவி மோகன், நடுவில் சில சர்ச்சைகளில் சிக்கினாலும், நேற்று வெற்றிகரமாக தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்‘-ஐ தொடங்கினார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ப்ரோ கோட்‘ திரைப்படத்தின் அசத்தலான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி மோகன்

தனது திருமண வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்த நிலையில், அதிலிருந்து மீண்டு வந்து, நேற்று தனது தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்‘ நிறுவனத்தை, ஒரு விழா எடுத்து வெற்றிகரமாக தொடங்கினார் ரவி மோகன்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் திரைப்பட உலகம் மட்டுமல்லாமல், பிற மொழி திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக, தமிழ் மக்களுக்கு நன்கு பரிட்சையமான கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த விழாவில் பங்கேற்று, ரவி மோகனை வாழ்த்தினார்.

ப்ரோ கோட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

இந்த விழாவின்போது, ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களின் பூஜையும் நடைபெற்றது. அதில் ஒன்று, டிக்கிலோனா திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோ கோட்‘ திரைப்படம். இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.

அவரோடு, எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீகொளரி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பூஜை போட்ட கையோடு, இன்று ‘ப்ரோ கோட்‘ திரைப்படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது ரவி மோகன் ஸ்டுடியோஸ்.

இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ப்ரோமோவை பார்க்கும் போது, படம் நிச்சயம் இன்றைய இளசுகளை கவரும் வகையில் இருக்கும் என்பது தெரிகிறது.