Ravi Mohan Aarti Keneeshaa: தமிழ் திரையுலகில் ரவிமோகன் - ஆர்த்தி - கெனிஷா விவகாரம் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.

ரவிமோகன் - ஆர்த்தி - கெனிஷா விவகாரம்:

ஜெயம் ரவி என அனைவராலும் அறியப்பட்ட நடிகர் ரவி மோகன், அண்மையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இரண்டு மகன்களை கொண்ட இந்த தம்பதி திருமண உறவில் இருந்து பிரிய, விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் நெருக்கம் காட்டுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கூட இருவரும் சேர்ந்து பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி அறிக்கை வெளியிட, அதற்கு விளக்கம் தரும் வகையில் ரவி மோகன் நீண்ட அறிக்கையை வெளியிட்டு தனது பக்க நியாயத்தை எடுத்துரைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ரவி மோகனை சகோதரர் என குறிப்பிட்டு கெனிஷா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அடுத்தடுத்த அறிக்கைகளால், ரவிமோகன் - ஆர்த்தி - கெனிஷா விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் அடங்காத ”தீ”

ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தது முதலே, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் பேசுபொருளாகியுள்ளது. ரவி மோகன் - ஆர்த்தி - கெனிஷா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன அசைவுகளையும் கூட, நெட்டிசன்கள் தொடர்புப்படுத்தி தகவல் என்ற பெயரில் சமூகவலைதளங்கள் வாயிலாக சமுதாயத்தில் உலாவவிட்டு வருகின்றனர். தகவல் உண்மையா? பொய்யா? அதன் பின்புலம் என்ன? என்ற எந்த கேள்விக்கான பதிலையும் தேடாமல், கிசுகிசுக்களை தாராளமயமாக்கி அள்ளி வீசுன்றனர். நமக்கு தேவையானது எல்லாம் லைக்ஸ், வியூஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்ஸ் தானே. அடுத்தவன் வாழ்க்கை எக்கேடு கெட்டால் நமக்கு என்ன? என்ற பிழைப்புக்கான விதியை தவறாமால் பின்பற்றுவதை காண முடிகிறது.

நீதிபதிகளாகும் நெட்டிசன்கள்:

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதி மட்டுமல்ல, சினிமா துறையில் யார் பிரிவினை அறிவித்தாலும், நம்மூர் நெட்டிசன்களால் தாங்கிக் கொள்ள முடியாது. என்ன நடந்தது, காரணம் என்ன? ஏன் பிரிந்து வாழ முடிவு செய்தார்கள் என்பதை, தனிப்பட்ட விவகாரமாக கருதி சம்பந்தப்பட்ட நபர்களே மறைக்க தான் முயல்கின்றனர். ஆனால், இந்த நெட்டிசன்களோ, “அண்ணா நீங்களுமா? உங்கள் மீதான மாரியாதையே போய்விட்டது,  எங்களுக்காக சேர்ந்து வாழுங்கள், உங்கள் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுங்கள், பிள்ளைகள் வாழ்க்கை என்னவாகும்? அந்த நடிகை/நடிகர் தான் இதற்கு காரணம், யார் மீது தப்பு இருக்கும்? உறவை மோசமாக்கியது அவர்/அவளாக தான் இருக்கும்” என ஒட்டுமொத்த விசாரணையையும் இவர்களே நடத்தி தீர்ப்பையும் வாரி வழங்கிவிடுகிறார்கள்.

”ஆண் தவறு செய்பவன் தான் - உருவ கேலி”

நட்சத்திர தம்பதிகள் பிரிவினை அறிவிக்கும் ஒவ்வொரு நேரத்திலும், எந்தவித விசாரணையுமின்றி ஆண்கள் நேரடியாகவே முதல் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி தற்போது ரவி மோகன் வரை பல உதாரணங்களை குறிப்பிடலாம். அதன்படி, ஆண்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். கூடுதலாக, பிரிவு காலத்தில் அவர்கள் ஏதேனும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துவிட்டால், வெறும் வாயனுக்கு அவல் கிடைத்த கதைதான். உதாரணமாக அண்மையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட, ரவி மோகன் அல்லது கெனிஷா தொடர்பான பதிவுகள் எதையேனும் கவனியுங்கள். அதன் கமெண்டில், “ கிளி மாதிரியான மனைவி இருக்கையில் குரங்கு மாதிரியான.., இவளுக்காகவா ஆர்த்தியை வீட்டு விலகினீர்கள்? இவட்ட அப்படி என்ன இருக்கு?” என சகட்டு மேனிக்கு எந்தவித அடிப்படை அறிவும் இன்றி நெட்டிசன்கள் வன்மத்தை கொட்டி தீர்க்கின்றனர். அதோடு, கெனிஷாவின் கேரக்டரையே கொச்சைப்படுத்தும் விதமான கமெண்ட்களும், சமூக வலைதளங்களில் தாராளமாக நிரம்பிக் கிடக்கின்றன.

ரவி மோகனிற்கு ஆதரவு தெரிவிப்பர்களும் சளைத்தவர்கள் அல்ல. மனதளவில் மனைவியால் அவர் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார், இதனை பல மேடைகளில் ரவியே குறிப்பிட்டு இருக்கிறார் என பழைய வீடியோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் ஆர்த்தி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

யார் சார் நீங்க?

இங்கு பிரதான கேள்வி என்னவென்றால், யார் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என முடிவு செய்ய நீங்கள் யார்? திருமணம் ஆகிவிட்டால் பிரிந்து வாழவே கூடாது என இருந்தால், அரசியலமைப்புச் சட்டம் ஏன் விவாகரத்து எனும் வாய்ப்பினை வழங்குகிறது? தாலியை கட்டிவிட்டோம், தாலியை கட்டிக்கொண்டோம் என்பதற்காக என்ன நடந்தாலும் காலம் முழுவதும் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதேனும் உள்ளதா? அடுத்தவரின் விவாகரத்து முடிவில் கருத்துகளை சொல்கிறோம் என்ற பெயரில், அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நுழைய யார் சார் நீங்க? சினிமா பிரபலம் என்பதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவும்,  தரம் தாழ்ந்து பேசவும் உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? ஒருவருடன் காலம் முழுவதும் சேர்ந்து வாழ்வதும், மனம் ஒத்துபோகவிட்டால் பிரிந்து தங்களுக்கான புதிய பாதையை அமைப்பதும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு தீர்வாக மாறிவிட்டது. ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியில் யார் பக்கம் வேண்டுமானாலும் நியாயம் இருக்கலாம்? ரவி மோகன் - கெனீஷா தம்பதிகளாக மாறலாம்? அல்லது நண்பர்களாகவே கூட இருக்கலாம்? அதைபற்றிய கவலை நமக்கு ஏன்? அதனை அறிவதன் மூலம் நமக்கு என்ன சார் பலன் இருக்கு?

அடங்காத பசி:

சமூக வலைதளங்களை தாண்டி, மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் கூட திரைப்பிரபலங்களின் வாழ்க்கையை தங்களது டிஆர்பிக்காக பயன்படுத்திக் கொள்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதாகவும், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதாகவும், சமூகத்திற்கான அரசியல் மாற்றம் மற்றும் முன்னேற்றம் தொடர்பாகவும் வெளியிட எத்தனையோ செய்திகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் விடுத்து ஒரு சினிமா பிரபலத்தின் வாழ்க்கை சம்பவங்களால் தங்கள் பக்கம் பார்வையாளர்களை கவர முயல்கின்றன. அண்மையில் ஒரு நடிகையின் அந்தரங்க வீடியோ கசிந்த விவகாரத்தையும் இதற்கு ஒரு உதாரணமாக குறிப்பிடலாம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆன ஊடகமே இப்படி தரம் தாழ்ந்து செல்லும் வேலையில், கட்டுப்பாடுகளே இல்லாத நெட்டிசன்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா ?