சாதிய மோதல்களை தூண்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இராவண கோட்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் தனி பிரிவில் நாடார் சங்கத்தினர் புகாரளித்துள்ளனர்.


இராவண கோட்டத்திற்கு தடை விதிக்க கோரிக்கை:


நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேசு நாடார்  சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள புகாரில்,  ”பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சீமை கருவேல மரம் அரசியல், முதுகுளத்தூர் கலவரம் தொடர்பான காட்சிகளை மையப்படுத்தி தவறாக சித்தரிக்க முயலும் விரைவில் வெளிவர உள்ள இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  அதோடு, தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சாதி வன்மத்துடன் எடுக்கப்பட்டுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளன.


இராவண கோட்டம்:


நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், சாந்தனுவால் இன்னும் தனக்கான நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்த சூழலில் தான் கிராமப் பின்னணியை மையமாக கொண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்தில், பிரபு மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.


12ம் தேதி ரிலீஸ்:


இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நேரும் கலவரம், அதிலேயே காதல், நட்பு, குடும்பம் மற்றும் துரோகம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இராவண கோட்டம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் 19 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தொடர்ந்து, வரும் 12ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இராவண கோட்டம் திரைப்படம் சாதிய மோதல்களை தூண்டும் விதமாக உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நாடார் சங்கம் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


இயக்குனர் பின்னணி:


இராவண கோட்டம் படத்தை இயக்கியுள்ள விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஏற்கனவே, கடந்த 2013ம் ஆண்டு மதயானை கூட்டம் எனும் திரைப்படம் வெளியானது. கதிர், ஓவியா மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த இந்த படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இராவண கோட்டம் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.