கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான போர் தொழில் திரைப்படம் வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு நல்ல சைக்காலஜிக்கல் த்ரில்லராக பேசப்படுகிறது. பலர் ‘போர் தொழில்’ படத்தையும் ராட்சசன் திரைப்படத்தையும் இணைந்து இவற்றில் எது சிறந்தப் படம் என்று இணையதளத்தில் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஒப்பீட்டளவில் ராட்சசன் திரைப்படம் ஒரு நல்ல க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைக் கொடுத்தது. ஆனால் ராட்சசன் திரைப்படம் செய்யத் தவறிய ஒரு முக்கியமான விஷயத்தை போர் தொழில் செய்துள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்!
சைக்கோ கொலைகாரன் கதை
இரண்டு படங்களும் சைக்கோ கொலைக்காரர்கள் பற்றிய கதைகளே. அவர்கள் செய்யும் கொலைகளை வைத்து அவர்களின் குணம் எப்படியானதாக இருக்கும், அவர்கள் ஏன் இந்த கொலைகளை செய்கிறார்கள் என்பதை ஆராய்கிறார்கள் காவல் அதிகாரிகள். குற்றவாளிகளைக் கண்டறிந்த பின் அவர்களின் கடந்த கால வாழ்க்கை எடுக்காட்டப்படுகிறது. கடைசியில் அவர்கள் கொல்லப் படுகிறார்கள்.
சைகோபாத்களின் ஃப்ளாஷ்பேக்
கூகுளில் சைக்கோபாத் என்று தேடிப் பார்த்தால் ”பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய உளவியல்ரீதியான பாதிப்பிற்குள்ளாகி மனம் பிறழ்ந்தவர்கள்” என விளக்குகிறது. இது மிக பொதுப்படையான ஒரு விளக்கம் மட்டுமே. ஆனால் இன்று உளவியல் மருத்துவத் துறையில் பல்வேறு புதிய வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு சைக்கோ கிரிமினல் உருவாவதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.
சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
ஒருவகையில் இந்தக் கொலைகாரர்கள் எல்லாம் இந்த சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தங்களது பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனித்துவிடப் பட்டவர்கள். இந்தக் காரணங்களால் மனம் பிறழ்ந்து சமூக விரோதபோக்கைத் தேர்வு செய்பவர்கள். இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி, இந்தக் குற்றவாளிகளின் ஃப்ளாஷ்பேக்கை காட்டும் திரைப்படங்கள், அந்தக் கதைகளை, படத்தை நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே கையாள்கின்றனவா, அல்லது இந்தக் குற்றவாளிகளை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றதா?
ராட்சசன், போர்தொழில்
ராட்சசன் படத்தைக் காட்டிலும் போர் தொழில் படம் இந்த விஷயத்தை சரியாகக் கையாண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இரண்டு படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளையும் ஒப்பீட்டுப் பார்க்கலாம்.
ராட்சசன் க்ளைமேக்ஸ்
தனது சிறு வயதில் இருந்தே அனைவராலும் ’பொட்ட’ என்கிற வார்த்தையால அனைவரும் அவனை துன்புறுத்தியிருக்கிறார்கள். அவன் ஒரு கொலைகாரனாவதற்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கடைசியில் அவனை ஜெயிப்பதற்காக அவனை பலவீனமாக்குவதற்காக கதாநாயகன் பயண்படுத்துவதும் அதே ‘பொட்ட’ என்கிற வார்த்தையைத்தான். அதாவது அவன் எந்த வார்த்தையால் சமூக விரோதி ஆகினானோ அதே வார்த்தையால் அவனை வெல்ல நினைப்பது சரியாகுமா?
போர்தொழில்
மாறாக போர்தொழில் படத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவருக்கு இடையில் ஒரு தனிக்காட்சியாகவே குற்றவாளியின் தரப்பு விவாதிக்கப்படுகிறது. குற்றவாளியை இந்த நிலைக்கு தள்ளிய சமூக நிலையைக் கேள்விகேட்கிறார் அசோக் செல்வன். அதே நேரத்தில் குற்றவாளியின் செயல்களுக்காக அவனைத் தண்டிக்க மட்டுமே விரும்புகிறார் சரத்குமார்.
ஒரு கட்டத்தில் சரத்குமார் “எல்லா குற்றவாளிக்கு சொல்வதற்கு இப்படி ஒரு கதை இருக்கிறது. கடந்தகாலம் மோசமானதாக இருப்பவர்கள் எல்லாம் கொலைகாரனாகதான் ஆகவேண்டிய அவசியம் இல்லை . கொலைகாரனைப் பிடிக்கும் போலீஸாகவும் ஆகலாம்” என்கீறார். இந்த வசனத்தின் மூலம் சரத்குமார் கதாபாத்திரத்திற்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருந்ததும், அவர் இவ்வளவு கடுமையான ஒருவராக அவர் இருப்பதற்கான நியாயமும் நமக்கு புரிகிறது.
இதைத் தொடர்ந்து அசோக் செல்வன் பேசும் அடுத்த வசனம்தான் போர்தொழில் திரைப்படத்தை ராட்சசன் படத்தை விட ஒருபடி மேலே கொண்டு செல்கிறது.
அவசியமான உரையாடல்!
” நீங்க வேணா போலீஸ் ஆகியிருக்கலாம் ஆனா நீங்க நார்மல் இல்லை” என்கிறார் அசோக் செல்வன். அதாவது ஒருவரின் கடந்தகாலம் எப்படியானதாகவும் இருக்கலாம். அவர் நல்லவராக மாறுவதும், கெட்டவனாக மாறுவது அவர் கையில்தான் இருக்கிறது. ஆனால் தங்களது கடந்தகால பாதிப்புகளில் இருந்து இருவரும் விடுபடுவது அவசியம் என்பதை உணர்த்தவே இந்த வசனத்தை பேசுகிறார் அசோக் செல்வன். இந்த விவாதத்தை செய்யத் தவறியது ராட்சசன் திரைப்படம்.
இறுதியில் தனியாக வந்து வாசலில் வந்தமர்ந்திருக்கும் சிறுவனிடம் அஷோக் செல்வன் சென்று ஆறுதல் அளிப்பதைப் பார்த்து ஒரு நொடி கண் கலங்குகிறார் சரத்குமார். அந்த ஒரு நொடி ஆறுதல் இல்லாமல் தான் இத்தனைக் குற்றவாளிகள் இங்கு உருவாகியிருக்கிறார்கள் என்கிற அக்கறையில் எடுக்கப்பட்டிருக்கிறது போர் தொழில்!