விஜய் ஆண்டனியின் ரத்தம் (Raththam) படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் ரகளையான ப்ரோமோ வீடியோ ஆகியவை வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.


இரண்டு மாதத்துக்கு ஒரு படம்


நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் அப்டேட் சமீபத்தில் தான் வெளிவந்தது. நடிகை மிருணாளினி ரவி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இயக்குநர் சி. எஸ். அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் 2022ஆம் ஆண்டு முதல் உருவாகி வரும் ரத்தம் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. மஹிமா நம்பியார்,  நந்திதா ஸ்வேதா,  ரம்யா நம்பீசன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இன்று காலை இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என நேற்றே விஜய் ஆண்டனி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் தனஞ்செயன் தோன்றும் ஜாலி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் ரத்தம் படம் வரும் செப்டெம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சி.எஸ்.அமுதன் பாணி அப்டேட்


நேரு ஸ்டேடியத்தில் பிரபலங்களைக் கூப்பிட்டு பிரமாண்டமாக ஆடியோ லான்ச் செய்ய வேண்டும், அதில் விஜய் ஆண்டனி பரபரப்பைக் கிளப்பும் வகையில் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை தனஞ்செயன் விஜய் ஆண்டனியிடம் எழுப்பி டயர்டாவது போன்று ஜாலியாக இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.


 




தமிழ் படம் 1 & 2 படங்களை இயக்கி ஏற்கெனவே தமிழ் சினிமாவில் கவனமீர்த்துள்ள சி.எஸ்.அமுதன் இந்த முறை அவற்றில் இருந்து மாறுபட்டு, விஜய் ஆண்டனிக்கு வசதியான சீரியஸான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.


எனினும் இந்த ப்ரொமோஷனல் வீடியோ சி.எஸ்.அமுதனின் முந்தைய ஸ்டைலில் அமைந்து, இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


வரிசைக்கட்டும் படங்கள்


முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அதற்கு முன்னதாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தியது.


இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் மிருணாளினி ரவியுடன் ரோமியோ படத்தில் இணைந்துள்ளார் விஜய் ஆண்டனி.


பரத் தனசேகர் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், இளவரசு, தலைவாசல் விஜய். விடிவி கணேஷ், உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கும் நிலையில், அடுத்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.