Producer Dilli Babu: டில்லி பாபு தமிழ் சினிமாவில் ராட்சசன் மற்றும் பேச்சுலர் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் ஆவார்.
தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்:
தமிழ் சினிமா துறையில் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்பது தரமான மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அந்நிறுவனத்தை சேரும். இதனை ஜி. டிப்பி பாபு என்பவர் தான் நடத்தி வந்தார். இவர் பல்வேறு புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததால், ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில் படம் வெளியானாலே நிச்சயம் புதுமையாக இருக்கும் என்ற நம்பகத்தன்மையை உருவாக்கினார். இந்நிலையில் தான், யாரும் எதிர்பாராத விதமாக டில்லி பாபு உயிரிழந்துள்ளார்.
டில்லி பாபு மரணத்திற்கான காரணம்..!
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு, டில்லி பாபு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை டில்லி பாபுவின் உயிர் பிரிந்தது. அவரின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், டில்லி பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டில்லி பாபுவின் திரை பயணம்:
2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு, தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். அவரது முதல் படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்த மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள், கள்வன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு கதைகளை கேட்டு, பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு அவர் முன்பணம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் அடுத்ததாக வளையம் என்ற படம் வெளியாக இருந்தது. இந்த படத்தில் அவரது உறவினர் ஒருவரை நாயகனாக அறிமுகம் செய்ய இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.