தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதனை தெடர்ந்து வாரிசு படத்தில் அழகு பதுமையாக நடித்த ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
மீண்டும் 'சுல்தான்' கூட்டணியில் :
மீண்டும் சுல்தான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் நடிக்க உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா. அதன் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு 'ரெயின்போ' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை இயக்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக இப்படத்தை தயாரிக்க உள்ளது.
தேவ் மோகன் மற்றும் ராவ் ரமேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் இப்படம் அனைத்து வயதினருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
புதுமையான ஃபேண்டஸி காதல் படம் :
இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில் "அனைத்து வயது ரசிகர்களை கவர கூடிய திரைப்படமாக இருக்கும் 'ரெயின்போ' திரைப்படம். இதுவரையில் எங்களின் அனைத்து படத்திற்கு நீங்கள் கொடுத்த அமோகமான வரவேற்பை இப்படத்திற்கும் கொடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இப்படத்தில் ராஷ்மிகாவின் வித்தியாசமான பரிமாணத்தை பார்ப்பீர்கள். திறமையான நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் நிச்சயம் இப்படத்தை அடுத்த லெவலுக்கு எது செல்வார்கள் என நம்புகிறோம். இது வரையில் இந்திய சினிமா பார்த்திராத ஒரு அற்புதமான காதல் கதையை உங்களுக்கு கொடுக்க உள்ளோம். இப்படத்தின் புதுமையான கதைக்களம் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும்" என கூறியிருந்தார்.
வித்தியாசமான ரோலில் ராஷ்மிகா:
ரெயின்போ படத்தில் நடிப்பது குறித்து ராஷ்மிகா கூறுகையில் "முதல் முறையாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். ரெயின்போ திரைப்படம் நிச்சயம் உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இப்படத்தின் பூஜை ஏப்ரல் 3ம் தேதியான இன்று நடைபெற்றது மேலும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளது.