கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக்  ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். 


இதனையடுத்து 2020ல் தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம்  அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும், புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திலும் ராஷ்மிகா பணியாற்றி வருகிறார். 


இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தையொட்டி நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.






அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கு நினைவிருக்கிறது நமது பள்ளிக் காலங்களின் போது குழந்தைகள் தின கொண்டாட்டம் என்பது மிகப்பெரிய விஷயம்…ஆனால் அதை நாம் அறிவதற்கு முன்பே நாம் அனைவரும் மிக வேகமாக வளர்ந்து விட்டோம். இத்தனை வருடங்களாக நான் கற்றுக் கொண்டது… "வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய ஒன்று; அதனால் வாழும் காலங்களில் வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ வேண்டும்" என்று நடிகை ராஸ்மிகா கூறியுள்ளார். மேலும் தனது செல்ல நாய்க்குட்டிகளான ஆரா மற்றும் ஸ்னோவின் பெயர்களைக் குறிப்பிட்டு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது சகோதரிகளான சித்தாராவிற்கும் சுமனுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது தங்கை சுமனை இந்த தருணத்தில் அவர் மிஸ் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.






மேலும் "அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, அன்பு மற்றும் அக்கறை எங்கும் இருக்கட்டும்" என்று இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.