ஏபிபி 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024'


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால்   நேற்று காலை தொடங்கி வைத்தார். முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் இறுதி பேச்சாளராக நடிகை ராஷி கண்ணா கலந்துகொண்டார். தென் இந்திய சினிமாவைப் பற்றி தான் தப்பான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகவும் அது தனக்கு எப்படி மாறியது என்பது குறித்தும் நடிகை ராஷி கண்ணா பேசியுள்ளார்


தென் இந்திய சினிமா பற்றி ராஷி கண்ணா


தமிழ், இந்தி , தெலுங்கு , ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார் ராஷி கண்ணா. ஆனால் பாலிவுட்டில் அவருக்கு குறைவான அங்கீகாரமே கிடைத்துள்ளது குறித்து ராஷி கண்ணா பதிலளித்தார். " உண்மையான நடிகர்கள் புகழ்ச்சியை தேட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நம்மைப் பற்றி வெளியில் பேசுகிறார்களா என்பது ஒரு நடிகரின் கவலையாக இருக்கக்கூடாது. நடிப்பை ஒரு பயணமாக எடுத்துக்கொண்டு அதில் பயணிப்பதே ஒரு நடிகரின் வேலை. அதே போல் நாம் நடிக்கும் படங்களை சரியான ஆடியன்ஸை நோக்கி அதை கொண்டு சேர்க்க வேண்டும். தென் இந்திய படங்கள் இதை சரியாக செய்கின்றன. எங்களுக்கு மிக உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். தென் இந்திய சினிமாவில் ஒருத்தியாக இருப்பதை நான் ரொம்பவும் விரும்புகிறேன்.


தென் இந்திய சினிமா என்றாலே பாட்டு பாடுவதும் ஆடுவதும் தான் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன்.  ஆனால் ரொம்ப தவறாக நினைத்துவிட்டேன். இங்கே அந்த அளவிற்கு நல்ல படங்கள் இருக்கின்றன. அதனால் தான் இன்று தமிழ் சினிமா இந்தி சினிமா என்று இல்லாமல் இந்தியன் சினிமா என்று குறிப்பிடுவதை நான் ஆதரிக்கிறேன்.  நிறைய தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது என்பதே எனக்கு தெரியாது. ஆனால் இந்தியில் நான் ரசித்த நிறைய படங்கள் தமிழ் அல்லது தெலுங்கு மொழி படங்களின் ரீமேக் தான். இன்னும் சொல்லப்போனால் நான் தமிழ் தெலுங்கில் நடித்த டப்பிங் படங்களைத் தான் வடமாநிலங்களில் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என்னை தென் இந்திய நடிகையாகத்தான் பார்க்கிறார்கள் இந்தி நடிகையாக இல்லை." என ராஷி கண்ணா தெரிவித்தார்