1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாரானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது 83 திரைப்படம். படத்துக்கு இன்று வரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 






 


குறிப்பாக கபில்தேவாக நடித்திருந்த ரன்வீருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடை, உடை என கபில்தேவாவாகவே அவர் வாழ்ந்திருந்தார். இந்நிலையில் படத்துக்கும், தன்னுடைய நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பால் ரன்வீர் திக்குமுக்காடி போயுள்ளார். ஒரு நேர்காணலில் உணர்ச்சிவசப்பட்டு ரன்வீர்  கண் கலங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் அழுவது எனக்கு பிடிக்காது. அதனை நான் விரும்புவதில்லை. ஆனால் 83 படத்துக்கு வரும் வரவேற்பு என்னை கண் கலங்க வைக்கிறது. நான் நடிகனானதே ஒரு அதிசயம் எனக் கூறி கண்கலங்குகிறார். அந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ள பலரும் இது உங்கள் உழைப்புக்கான வெற்றி என்றும், இன்னும் உயரங்களை நீங்கள் தொடவேண்டும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்




முன்னதாக, படத்தின் முதல் நாள் காட்சியை படத்தின் ரியல் மற்றும் ரீல் நட்சத்திரங்கள் திரையரங்கிற்கு சென்று ஒன்றாக பார்த்தனர். படத்தைப் பார்த்த ரியல் இந்திய அணி வீரர்கள் படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்த்தான், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழக வீரர். படத்தில்  சீக்காவாக நடித்திருக்கும் ஜீவா அப்ளாஸ் வாங்கினார். 






ஒரு குறிப்பிட்ட காட்சியில், காமெடி, அழுகை என எமோஷன்கள் மாறி மாறி வந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தை பார்த்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். நடிகர் ரஜினியும் பாராட்டுகள் தெரிவித்தார்.  தனது டுவிட்டர் பக்கத்தில்,  “83 என்ன ஒரு திரைப்படம். படம் பிரமாதமாக உள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர் கபீர் கான், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.