பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படம் இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கபாலி
அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ரஞ்சித் எந்த மாதிரியான அரசியல் பேச தமிழ் சினிமாவில் வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் சத்தமாகவே புரியவைத்து விட்டார் ரஞ்சித். பல தரப்புகளில் இருந்து அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தன. என்ன பெரிதாக செய்துவிடப் போகிறார் என்று எதிர்பார்த்தவர்களும் உண்டு. இந்த மாதிரியான சமயத்தில் தான் ரஞ்சித் தனது அடுத்த படம் ரஜினிகாந்தை வைத்து இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பேச நினைக்கும் ஒருவர் கமர்ஷியல் சினிமாவின் சூப்பர்ஸ்டாரை வைத்து என்ன மாதிரியான அரசியலை பேசிவிட முடியும் அப்படி பேசினாலும் அது எந்த அளவிற்கு வீரியமாக இருக்கும் என்கிற கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகின. இத்தனைக் கேள்விகளுக்கு மத்தியில் கடந்த 2016 ஆம் வருடம் ஜூலை 22 ஆம் தேதி கபாலி திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பாகவே சந்தோஷ் நாராயணன் இசையமைத்தப் பாடல்களும் அவற்றின் வரிகளும் புதுவிதமான கிளர்ச்சியை மனதில் ஏற்படுத்தின.
படத்தின் கதை
இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணத்தினால் தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற தமிழர்கள் அங்கிருக்கும் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் கபாலி. அதே சமயத்தில் மலேசியாவில் உருவாகிவரும் தமிழர்களின் இயக்கத்தின் சேர்ந்து அதில் மதிக்கதக்க ஒருவராக உருவாகிறார் கபாலி. பணம் மற்றும் அதிகாரத்திற்காக தனது சக நண்பர்களால் ஏமாற்றப்பட்டு தனது மனைவியிடம் இருந்து பிரிக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார் கபாலி. பல வருடங்கள் கழித்து சிறையில் இருந்து திரும்பி வரும் கபாலி தனது மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதை தெரிந்துகொள்கிறார். தனது மனைவியைத் தேடிச் சென்று அவரை சேருகிறார். பின் படத்தின் வில்லன்களுடம் சண்டைபோட்டு கடைசியில் அவரது மக்களில் ஒருவனால் கொல்லப்படுகிறார்.
கபாலி மேல் வைக்கப்பட்ட விமர்சனங்கள்
கபாலி படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமான ஒரு விமர்சனம் என்றால் நேர் கோட்டில் பயணிக்கும் ஒரு தெளிவான கதையாக படத்தை சொல்ல முடியாததே. சிறையில் இருந்து வெளிவரும் கபாலி மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். பின் கபாலி தனது மனைவியை தேடிச்செல்லும் பயணமாக நீள்கிறது படம், இதற்கிடையில் கபாலியின் கடந்தகாலத்தின் மக்களுக்காக போராடும் ஒருவராக காட்டப்படுகிறார் கபாலி. மக்களுக்காக போராடும் ஒருவர் எப்படி கேங்ஸ்டராக ஆனார் என்பது படத்தின் தொக்கி நிற்கும் மிகப்பெரிய கேள்வி. பின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்த கபாலி வில்லன்களை சுட்டு தள்ளுகிறார். ரஞ்சித்தின் சமூக கருத்து, காதல் மற்றும் சூப்பர்ஸ்டாரின் கதாநாயக பிம்பம் ஆகிய மூன்று கதையம்சங்களுக்கு நடுவில் மாற்றி மாற்றி பயணிக்கும் கபாலி ரசிகர்களுக்கு முழுமையான ஒரு அனுபவத்தை கொடுக்கத் தவறிவிட்டது.
ரஞ்சித் டச்
அதே நேரத்தில் அட்டகத்தி மெட்ராஸ் படத்தைக் காட்டிலும் மிக அழகான ஒரு காதலை கபாலி படத்தில் உருவாக்கியிருந்தார் ரஞ்சித். தனது மனைவி உயிரோடு தான் இருக்கிறார் என்று தெரிந்து அடுத்த நாள் அவரை பார்க்க இருக்கும்போது கபாலி பேசும் வசனங்கள் ரஞ்சித் ஒரு உணர்வெழுச்சிகள் நிறைந்த தருணங்களை உருவாக்குவதில் கெட்டிகாரர் என்பதை காட்டியது. கேங்ஸ்டராக இருந்த ஒருவர் பல வருடங்களுக்குப் பிறகு தனது மனைவியைத் தேடிச் செல்லும் ஒரு கதையாக மட்டுமே இருந்திருந்தால் கூட கபாலி படத்தில் இன்னும் இதுமாதிரியான தருணங்களை ரஞ்சித்தின் எழுத்தில் பார்த்திருக்கலாம்.
ஒரு படைப்பாளியின் முயற்சியில் எத்தனை விமர்சனங்களை வேண்டுமானாலும் நாம் வைக்கலாம். அது அந்த படைப்பாளியின் படைப்பை மேம்படுத்துவதன் நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அரசிய காழ்ப்பில் அல்ல. அந்த வகையில் விமர்சனங்கள் இருந்தாலும் கபாலி படத்தில் தான் எடுத்துக்கொண்ட மிகப்பெரிய சவாலை செய்துமுடிக்கவும் அதில் புதிதான ஒன்றை முயன்று பார்த்த இயக்குநரின் நேர்மையான நோக்கமுமே வணிகத்தைத் தவிர்த்து தனது படைப்புடன் ரஞ்சித் உரையாட விரும்பும் நோக்கம் புலனாகிறது.