நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வரும் ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து  கொண்ட ரஞ்சித் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். பொதுவாக உண்மை காதல், ஒரு தலை காதல், முக்கோண காதல், கள்ள காதல் போன்றவை தான் அதிகமாக அனைவரும் கடந்து செல்லும் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக நாடக காதல் என்ற ஒரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. நடிகர் ரஞ்சித்தின் 'கவுண்டம்பாளையம்' திரைப்படமும் நாடக காதல் குறித்து தான் பேசப்படுகிறது. அப்படி நாடக காதல் என்றால் என்ன என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்:


 



 


"நம்மை சுற்றிலும் காதல் கல்யாணம் செய்து கொண்ட பல பேர் இருக்கிறார்கள். பலரின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தும் உள்ளனர். தன்னுடைய மகனோ அல்லது மகளோ சரியான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது என்றால் அவர்கள் நிச்சயம் ஒரு பெற்றோராக பிள்ளைகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். 


அறிவு வந்த பிறகு காதலிப்பது என்பது வேறு, 16 முதல் 19 வயதுக்குள் வரும் காதல் என்பது வேறு. தமிழ்நாடு முழுவதுமே இந்த வயதில் உள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த பணக்கார பெண் பிள்ளைகளை டார்கெட் செய்யப்படுகிறார்கள். பெற்றோர்களின் பிரதிநிதியாக தான் நான் இதை பேசுகிறேன். தமிழ்நாட்டில் ஒரு மாதிரி எடுத்துக்கொள்வார்கள் குக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு நான் சொல்லும் வலி புரியும். 


பெரும்பாலான வீட்டில் பல கனவுகளோடு பெண் பிள்ளையை கடவுளாக பாவித்து வளர்க்கிறார்கள். பெற்றோர்களின் வாழ்க்கையே அந்த பிள்ளையாக இருக்கும் போது ஒரு நாள் அந்த வாழ்க்கையே இல்லாமல் போகும் போது இருக்கும் வலி கொடுமையானது. உண்மையான காதலாக இருந்தால் பெற்றோருடன் வந்து பெண் கேட்கலாமே. அந்த முறையே இப்போது கிடையாது. நேரடியாக பொண்ணை தூக்குவது தான் முதல் விஷயமே. அதிலும் குறிப்பாக பணக்கார வீட்டின் பெண் பிள்ளைகளை தூக்குவதற்கு ஒரு தனி டீமே இருக்கிறது.


பெற்றோருக்கு தெரியும் தன்னுடைய பிள்ளையுடைய வாழ்க்கை என்ன என்பது. தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆணவ கொலை நடப்பதற்கு முக்கியமான காரணமே இது தான். ஒரு பிள்ளையை இழந்து நிற்கும் பெற்றோரிடம் இவன் சாதியை பற்றி பேசுகிறான், இவன் சாதி வெறியன் என்று தான் சொல்கிறார்கள். பெற்றோர் பிள்ளை பறிபோனதை பற்றி கவலைப்படாமல் சாதியை பற்றி நினைத்து தான் அழுகிறார்கள் என சொல்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் வலியை யாருமே பார்ப்பதில்லை. 


படிக்கும் பிள்ளைகளை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றுவது, தூக்குவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, மீறினால் தாலியை கட்டுவது, குழந்தையை கொடுப்பது என பேரம் பேசவே பெரிய டீம் வேலை செய்கிறது. இது தான் நாடக காதல். என்னுடைய படத்தில் சாதியை பற்றி பேசவில்லை. பெற்றோரின் சம்மதம் இல்லாத காதலை பற்றி மற்றும் பேசியுள்ளேன்" என்றார்.