‘புரியாத புதிர்’ ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் மூன்றாவது படம் ’மைக்கேல்’.
கலவையான விமர்சனம்
இவரது முந்தைய படங்கள் காதல் கதைகளாக அமைந்த நிலையில், இவற்றிலிருந்து மாறுபட்டு கேங்க்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கெளதம் மேனன், திவ்யான்ஷா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரது நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
தமிழ் இயக்குநரான ரஞ்சித் ஜெயக்கொடி தன் மூன்றாவது படமான இப்படத்தின் மூலம் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் பான் இந்தியா பட உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் முதன்மையாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் 25 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில், ஒரு புறம் ஸ்டைலிஷான கேங்ஸ்டர் படம் எனும் விமர்சனத்தையும், மற்றொரு புறம் ”இந்திய சினிமாக்களில் பார்த்து சலித்த சுவாரஸ்யமற்ற கதை, கேஜிஎஃப் 2 படக்காட்சிகள் போல் வெறும் பில்ட் அப் மட்டுமே கொடுக்கிறார்கள்” என்பன போன்ற விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.
பதிலளித்த இயக்குநர்
குறிப்பாக நெட்டிசன்கள் இப்படத்தைக் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், முன்னதாக இந்த விமர்சனங்களுக்கு பதிலளுக்கும் வகையில் ரஞ்சித் ஜெயக்கொடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன்.
அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்.
மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையிலும் சாம் சி எஸ்ஸின் இசை நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதே போல் விஜய் சேதுபதியின் கௌரவக் கதாபாத்திரம் திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளி கவனமீர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Lata Mangeshkar : நீங்காத ரீங்காரம் நீதானே.. லதா மங்கேஷ்கர் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. உங்க மனசுக்கு உடனே தோணும் பாட்டு எது?