பிரபல இசையமைப்பாளரான இளையராஜா நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு குறித்து பலரும் இசை தொடர்பான அறிவிப்பா அல்லது அரசியல் தொடர்பான அறிவிப்பா என்கிற கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இளையராஜா அந்த ட்வீட்டில் தனது இசை நிறுவனத்தையும் டேக் செய்து அவர் வெளியிட்டுள்ளதால், பெரும்பாலும் இசை நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பாகவே இருக்கும் என தெரிந்தது.
இந்தநிலையில், நேற்று மாலை அறிவித்தது போல இன்று இசை தொடர்பான நிகழ்ச்சி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில்," ரசிகர் பெருமக்களே! வருகின்ற ஜூன் 5 ம் தேதி மியூசிக் அகடாமியில் நான் இசையமைத்த கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு கர்நாடகா சங்கீதத்தில் வெளிவந்த சினிமா பாடல்களை திருமதி. ரஞ்சனி மற்றும் காயத்திரி இருவரும் பாட இருக்கின்றனர். இது மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கும். கர்நாடக சங்கீதத்தில் எவ்வளவு ஆழம் இருக்கிறதோ அதையும், சினிமா பாடல்களையும் முறைப்படி பாட இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை ரசிகர் பெருமக்கள் தவறவிட வேண்டாம். இசை நிகழ்ச்சியில் என்னுடைய பாடல்களை எந்தெந்த வகையில் விளக்க போகிறார்கள் என்பதை உங்களை போல் நானும் கேட்க ஆவலாக இருக்கிறேன்". என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் இசை மேதையாக பார்க்கப்படுபவர் இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருக்கும் இளையராஜா 1000த்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படங்களுக்கு ஒரு பக்கம் இசையமைத்து வரும் இளையராஜா மற்றொரு பக்கம் இசைக்கச்சேரிகளை நடத்துவதையும் வழக்கமாக மாற்றி இருக்கிறார்.
அவரது இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அண்மையில் கூட சென்னை தீவு திடலில் ராக் வித் ராஜா என்ற பெயரில் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, கங்கை அமரன், பவதாரணி, கீர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தனது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி கோவையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருப்பதாக இளையராஜா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்