பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட நடிகர்களின் வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு இணைந்த ஜோடி, ஆலியா பட்-ரன்பீர் கபூர். இவர்கள் இருவரும், சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தைக்கு பெற்றோர்களானார்கள். 


ஆலியா பட்-ரன்பீர் காதல்:


இந்தி திரையுலகில் மட்டுமன்றி, அகில இந்திய திரையுலகிலுமே காதல் பறவைகளாக சில நடிகர் நடிகைகள் சுற்றுவது வழக்கம். அதற்கு ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் விதிவிலக்கல்ல. பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர். கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் சூழ இவர்கள் இருவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், ரன்பீர் கபூர் ஆலியா பட்டை தூக்கியவாறு வீட்டிற்குள் செல்லும் வீடியோக்களும சமூக வலைதளங்களை ஒரு கலக்கு கலக்கியது. 




பெண் குழந்தைக்கு பெற்றோர்!


திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா. அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட நடிகை ஆலியா தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 






ரன்பீரின் பயம்:


புதிதாக தந்தையாகியுள்ள ரன்பீர், துபாயில் நடைப்பெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அதில் தனது குடும்பம் குறித்தும், தனது மகள் குறித்தும் பேசியுள்ளார் ரன்பீர். தனது மகளை வளர்க்க நிறைய திட்டங்கள் வைத்துள்ளதாக கூறியுள்ள ரன்பீர், குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும், சில சமயங்களில் “எனக்கு மகள் இருக்கிறாள்” என்று கூறும் போது அதை நம்புவதற்கே தனக்கு சில நிமிடங்கள் தேவைப்படுவதாக ரன்பீர் கூறினார்.





அது மட்டுமன்றி, தனது மகளுக்கு 20 வயதாகும் போது தனக்கு 60 வயதாகும் என குறிப்பிட்ட அவர், “அந்த வயதில் அவளுடன் கால் பந்து விளையாட முடியுமா? அந்த வயதில் என்னால் அவளுடன் ஓட முடியுமா?” என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டேயிருக்கும் என கூறினார் ரன்பீர். இதுவே தனது மிகப்பெரிய பயம் என்றும் தெரிவித்தார் ரன்பீர்.