ஒரே மாதிரியான நடிகைகளை உற்பத்தி செய்யும் சினிமா


திரையில் வரும் நடிகைகள் ரசிகர்கள் குறிப்பாக ஆண் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புற அழகை கடந்த ஒன்று. அந்த நடிகை எவ்வளவு ஆழமான கதாபாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியமான ஒரு காரணம். சோனியா அகர்வால் , ரீமா சென் , அபிராமி , ராதிகா ஆப்தே , ஏன் இன்னும் சொல்லப்போனால் நிஜத்தில் சர்ச்சைக்குரிய ஒருவராக இருக்கும் கங்கனா ரனாவத் கூட தனது கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்தான். ஆனால் தங்கள் திறமையை உண்மையில் நிரூபிக்கும் வகையிலான கதைகளை நடிகைகள் தேர்வு செய்யும் ஆளுமை கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விதான். இன்ஸ்டாகிராமில் நாம் பெரும்பாலும் பார்ப்பது ஒரே மேற்கு நாடுகள் உருவாக்கிய உடலமைப்பை அடைய இங்கு மாங்கு மாங்கு என்று ஜிம்முக்கு போய் வீடியோ வெளியிடுவதை தான்.


ஒவ்வொரு படத்திலும் ஒரு புது நடிகை அறிமுகமாகியபடியே இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் வெகுஜன சினிமா இன்று மார்கெட்டில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலோ , மார்கெட் போய்விட்டாலோ என்கிற பல நிர்ணயங்களின் அடிப்படையில் புதுமுக நடிகைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. அதனால் தான் தமிழ் , கன்னடம் , இந்தி , மலையாளம் என எந்த ஒரு மொழியில் ஒரு நடிகை ஹிட் ஆனால் அவரை உடனே இழுத்து வந்து நடிக்க வைத்து விடுகிறார்கள்.


இதில் பெரும்பாலான நடிகைகளிடம் தனித்து சுட்டிக்காட்டி பேசும் அளவிற்கு எந்த தனித்துவமும் வெளிப்படுவதில்லை. மேலும் அவர்களின் திறமைகளுக்கு சவால் வைக்கும் கதாபாத்திரங்களும் கமர்ஷியல் படங்களில் இருப்பதில்லை.


சாய் பல்லவி பிறந்தநாள்




அப்படி எந்த விதமான எதிர்பார்ப்போ ஆர்பாட்டமோ இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தில் ஸ்டுடண்ட் என்று நினைத்து ரேகிங் செய்ய நிவின் பாலி அழைக்க ' நானா ' என்று அவர் சொல்லும் போது கேமரா அவரை நோக்கி திரும்பியபோதே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் சாய் பல்லவி.  இனிமையான முகபாவனைகளையும் , அவரது கள்ளமற்ற சிரிப்பையும் மலர் என்கிற பேரிளம் பெண்ணையும் நமக்கு அடையாளம் காட்டியதற்கு நாம் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.




முதல் படத்தில் இவ்வளவு பெரிய ரீச் ஆகிய சாய் பல்லவியை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறை வலைவீசித் தேடத் துவங்கியது. தென் இந்தியாவின் பிஸியான நடிகையாக வலம் வந்தார் சாய் பல்லவி. வணிக ரீதியாக வெற்றிப்படங்கள் அமைந்தாலும் மலர் மாதிரியான ஒரு அறிமுகத்திற்கு பின் அவரை அடுத்தடுத்த சிறந்த கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் பார்த்தது என்னவோ மாரி 2 மாதிரியான ஹீரோ ஆதிக்கம் செலுத்தும் படங்களில்.  பிரேமம் தவிர்த்து சாய் பல்லவியை புதிய பரினாமத்தில் காட்டிய ஒரே படம் என்றால் கார்கி தான். ஒரு நாயகனே இல்லாமல் சாய் பல்லவியால் மிக எளிதாக ரசிகர்களை எங்கேஜ் செய்ய முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.


உடல் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டு  திறமைகளை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் ஏராளமான நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை தனக்கு கிடைத்த ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்க முற்பட்டிருப்பார் சாய்பல்லவி. அதற்கு அவர் நடித்த படங்களே சாட்சியாக இருக்கும். 


முதல்முதலாக நடிக்க வந்த போது பிரேமம் படத்தில் அமைதியான அறிவான அலப்பறை இல்லாத டீச்சராக அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். அடுத்து தமிழில் முதல் படமே தனுஷுடன் மாரி 2. முழுக்க முழுக்க ஆண்களை கொண்டாடும் கேங்ஸ்டர் படமாக இருக்கும். ஆனாலும் அதிலும் தனது தனித்துவத்தை காட்சிபடுத்தும் விதமாக அலப்பறை கிளப்பிக்கொண்டு வாயாடி பெண்ணாக நடித்திருப்பார் சாய் பல்லவி. நடிப்பிலும் சரி, கெத்திலும் சரி, நடனத்திலும் சரி தனுஷுக்கு இணையாக பட்டையை கிளப்பியிருப்பார். 


அதேபோல் என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் நடித்திருப்பார். அதிலும் ஒரு சாராசரி மனைவி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். ஒரு கேரக்டர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே கொடுப்பதுதானே சிறந்த நடிப்பு. அந்த படத்தில் சூர்யாவுக்கு மனைவி மீது வரவேண்டிய வெறுப்பை ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கு சேர்த்து வரவைத்து விட்டாரே. அதைவிட அந்த நடிப்புக்கு என்ன அங்கீகாரம் கிடைக்க வேண்டும். புது புது முயற்சியை கையில் எடுக்கும்போது தவறுகள் சற்று தூக்கலாக அரங்கேறுவது சாய்பல்லவிக்கு மட்டும் எப்படி விதிவிலக்காகும். அவரும் ட்ரோல்களில் சிக்கி தவிக்கத்தான் செய்தார். 


வெற்றி பெறும் வரை வீண் முயற்சி என்பவர்கள் வெற்றி பெற்ற பின்னேதான் விடாமுயற்சி என்பார்கள். அந்தவகையில் சாய் பல்லவி தன் பார்வையில் விடாமுயற்சியாக செய்ய நினைக்கும் காரியத்தை செய்வது சிலருக்கு வீண்முயற்சியாக தெரியலாம். ஒருவர் தன் முயற்சியில் அடிக்கடி சறுக்கிறார் என்றால் புதிதாக ஒன்றை நிகழ்த்திக் காட்ட முயற்சிக்கிறார் என்றுதானே அர்த்தம். இன்னும் பல சாதிக்கட்டும் சாய்பல்லவி.