மனைவி ஆலியா பட் போல் தனக்கு ஹாலிவுட் ஆசையெல்லாம் இல்லை என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஜோடி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது. ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் முதன்முதலில் இணைந்து நடித்த படம் பிரம்மாஸ்திரா. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆலியாவின் வெற்றிப் பாதை:
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் பெண். அதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. இந்த நிலையில் தான், ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். ‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். படப்பிடிப்பு லண்டனில் நடந்து வரும் நிலையில், அது குறித்து புகைப்படங்களை ஆலியா அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
எனக்கு ஹாலிவுட் வேண்டாம்:
மனைவியில் ஹாலிவுட் என்ட்ரி குறித்து பேட்டியளித்துள்ள ரன்பீர் கபூர், எனக்கு ஹாலிவுட் கனவில்லை. என் கனவெல்லாம் பிரம்மாஸ்திரம் எப்போது வெளியாகும் என்பதைப் பற்றியே உள்ளது. நம் கலாச்சாரத்துடன் ஒட்டிய கதைக்கருவே எல்லா ரசிகர்களையும் திருப்தி படுத்தும். எனக்கு ஆடிசன் என்றால் கொஞ்சம் பயம். நான் எங்கு இருக்கிறேனோ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஆலியாவிடம் உள்ள வெற்றியையும், கனவையும் நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை என்று கூறினார்.
பிரம்மாஸ்திரா மீது எதிர்பார்ப்பு
அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியுடன் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா என பிரபல நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் க்ளிம்பிஸ் வீடியோ அண்மையில் வெளியானது. டீஸர் ஜூலையிலும், படம் செப்டம்பரில் திரைப்படமும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் அயன், பிரம்மாஸ்திரம் பாகம் 1 ரசிகர்களை வெகுவாகக் கவரும். இது ஒரு காதல் கதை. இந்தக் கதையில் ரன்பீரும் ஆலியா பட்டும் இயல்பாகப் பொருந்தியிருக்கின்றனர், என்று கூறினார்.