ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரன்பீர் கபூர் தான் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஆட்டம் பாட்டம் என வயது வித்தியாசமில்லாமல் வீதிகளில் மக்கள் உற்சாகமாக புதிய ஆண்டை வரவேற்றனர். அரசியல், திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் தொண்டர்கள், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சந்தீப் ரெட்டி வாங்கவின் அனிமல் படத்தில் நடித்து வரும் ரன்பீர் கபூருக்கு ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ரத்தம் படிந்த சட்டையில், ஒரு கைக்கு இடையில் கோடாரியும், மற்றொரு கையால் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டும் இருக்கும் ரன்பீரை பார்க்கும் போது நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முதலில் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரனீதி சோப்ரா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் விலக, ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டார்.
ரன்பீருக்கு ராசியான “2022”
இந்தி திரையுலகில் மட்டுமன்றி, அகில இந்திய திரையுலக ரசிகர்களாலும் ரசிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் கடந்தாண்டு ஷம்ஷேரா மற்றும் பிரம்மாஸ்திரா படம் வெளியானது. மேலும் 2 படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பிரம்மாஸ்திரா வசூல் மழை பொழிந்தது. அதேசமயம் சக நடிகை ஆலியா பட்டை 5 வருடமாக காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு ராஹா என்று பெயரிட்டிருந்தனர். இப்படியாக 2022 ஆம் ஆண்டு ரன்பீருக்கு ராசியாக அமைந்தது போல 2023 ஆம் ஆண்டும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.