ராமாயணம் பட நடிகர்கள் சம்பளம்
இந்தியில் ரூ 835 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது. முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமராக நடிக்கிறார். சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
ரன்பீர் கபூர் சம்பளம்
ராமாயணன் திரைப்படம் மொத்தம் இரு பாகங்களாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்காக ரன்பீர் கபூருக்கு ஒரு பாகத்திற்கு ரூ 75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ 150 கோடி அவர் சம்பளமாக பெற்றுள்ளார். ரன்பீர் கபூர் நடித்து கடைசியாக வெளியான அனிமல் திரைப்படம் உலகளவில் ரூ 900 கோடி வசூலித்தது
சாய் பல்லவி சம்பளம்
சாய் பல்லவி இப்படத்தில் சீதையாக நடிக்க தேர்வு செய்யப்பட்டது பரவலாக விமர்சிக்கப் பட்டது. முன்னணி பாலிவுட் நடிகைகளை தவிர்த்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சாய் பல்லவி நடிக்க தேர்வு செய்யப்பட்டதை குறிப்பிட்ட தரப்பினர் எதிர்த்து வந்தார்கள். சாய் பல்லவி நடித்து கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரூ 300 கோடி வசூல் ஈட்டியது. ஒரு படத்திற்கு 2 முதல் 3 கோடி சம்பளமாக பெற்று வந்தார் சாய் பல்லவி. தற்போது ராமாயணம் படத்திற்காக அவர் ஒரு பாகத்திற்கு ரூ 6 கோடி என இரண்டு பாகங்களுக்கு 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர் 150 கோடி சம்பளமாக வாங்குகிறார். ஆனால் ராமர் கதாபாத்திரத்திற்கு நிகரான முக்கியத்துவம் சீதையின் கதாபாத்திரத்திற்கும் இருக்கிறது. ஆனால் சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு மட்டும் இவ்வளவு குறைவான சம்பளமா என ரசிகர்கள் அதிருபதியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவது நீண்ட நாள் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. தற்போது சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் மீண்டும் இந்த விவாதத்தை தொடங்கியுள்ளது