பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான அலியா பட்டும் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான ரன்பீரும் கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அலியா அறிவித்து தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அலியா, முன்னதாக  தனது டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா படங்களின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்து கொண்டு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.


தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அலியா - ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு ’ராஹா’ எனப் பெயரிட்டுள்ளதாக முன்னதாக அலியா தன் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்திருந்தார். இச்சூழலில் பாலிவுட்டில்  பாப்பரசி கலாச்சாரம் தொடர்ந்து  மேலோங்கி வரும் நிலையில், அலியா பட் - ரன்பீர் முன்னதாக புகைப்பட செய்தியாளர்கள் சிறப்பு மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து தங்கள் குழந்தை ராஹாவை தற்போதைக்கு புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இது குறித்து முன்னதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல பாலிவுட் ஃபோட்டோகிராஃபர் வரிந்தர் சாவ்லா பகிர்ந்துள்ள பதிவில், ரன்பீர் - அலியா, ரன்பீரின் அம்மா நீது கபூர் ஆகியோர் தங்களை சந்தித்ததாகவும், குழந்தையை குறைந்தது 2 வயது வரை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும், சரியான தருணம் மற்றும் வயதில் தாங்களே பாப்பரசிக்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்போம் என்றும் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளார்.






ரன்பீர் -அலியாவின் இந்த முடிவு பாலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.