அனிமல்


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்தை இந்தியில் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர் மற்றும் பாபி டியோல் , பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். தமிழ் , இந்தி, மலையாளம், கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


வரவேற்பைப் பெற்ற ட்ரெய்லர்






சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தந்தை மகனுக்கு இடையிலான சிக்கலான உறவை மையப்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.  தந்தையின் கவனத்தை ஈர்க்க போராடும் பாசக்கார மகனாகவும் அதே நேரத்தில் கொடூரமான கேங்ஸ்டராகவும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூ நடித்திருக்கிறார்.


முன்னதாக தமாஷா, ஏ தில் ஹே முஷ்கில், ராக்ஸ்டார், ரஞ்சு, பர்ஃபி, வேக் அப் சிட், உள்ளிட்டப் படங்களில் தன்னுடைய நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்த ரன்பீர் கபூர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  பாலிவுட் சினிமாவில் தொடக்கத்தில் ஒரு ரொமாண்டிக் நடிகராக இருந்து வந்த ரன்பீர் கபூர் தன்னுடைய சினிமா பயணத்தை படிப்படியாக வடிவமைத்து வந்திருக்கிறார். சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்பிற்காக சாத்தியங்களை விரித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். அனிமல் திரைப்படத்தில் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கும் ரன்பீர் தமிழ் சினிமாக்களை பாராட்டும் விதமாக பேசியுள்ளார்.


பிடித்த தமிழ் படங்கள்






சமீப காலங்களில் தன்னை தமிழ் படங்களே அதிகம் கவர்ந்ததாக கூறியுள்ள ரன்பீர் கபூர் , நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் , லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படம் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிக வெற்றிப் படங்களைத் தந்த துறையாக கோலிவுட் சினிமா கருதப்படுகிறது. மேலும் தமிழ் திரைப்படங்கள் பிற திரைத்துறையினரிடம் கவனத்தை பெறுகின்றன என்பதையே இது காட்டுகிறது.