அனிமல்
அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கு, தமிழ் , இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம், சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
தற்போது ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் அனிமல். அனிமல் படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானதில் இருந்து இந்தப் படத்துகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள்.
ரன்பீர் கபூரின் புதிய அவதாரம்
பர்ஃபி, ஏ ஜவானி ஹேய் தீவானி, ராக்ஸ்டார், தமாஷா போன்ற சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஒரு புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்து வரும் நிலையில், அனிமல் படத்தில் அவரது லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ஒரு சிறிய முன்னோட்ட வீடியோ வெளியாகியது. உணர்ச்சிகரமான ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அனிமல் படம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த வீடியோ கொடுத்தது.
அனிமல் டீசர்
தொடர்ந்து, அனிமல் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த டீசரில் ரன்பீர் கபூர் எந்த மாதிரியான ஒரு சூழலில் வளர்கிறார், அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவு எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது. அவருக்கும் அவரது மனைவியான கீதாஞ்சலிக்கு இடையிலான உறவு எப்படி மோதிக் கொள்கிறது, தன்னுடைய தந்தையின் வளர்ப்பினால் தான் எப்படி இவ்வளவுப் பெரிய கேங்க்ஸ்டராக மாறுகிறார் என கதை பெரிதாகிறது.
பாலிவுட் எண்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா
அனிமல் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஸ்ரீவல்லியாக தென் இந்திய ரசிகர்களிடம் இடம்பிடித்த ராஷ்மிகா அனிமல் படத்தில் கீதாஞ்சலி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம்
முதல் பாடல்
இந்நிலையில் அனிமல் படத்தின் முதல் பாடலான ஹுவா மேன் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தி , தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் தொடக்கத்தில் கீதாஞ்சலி வீட்டாரிடம் தங்களது காதலைத் தெரிவிக்கிறார்கள் ரன்பீர் கபூரும் ராஷ்மிகாவும். குடும்பத்தினர் எல்லாரும் திட்டிக்கொண்டிருக்க இருவரும் முத்தமிட்டுக் கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து விமானத்தில் ஏறி இருவரும் செல்வது பாடலாக நீள்கிறது. கதாநாயகன் ரன்பீர் தயக்கமில்லாத நம்பிக்கையான ஒருவனாக இருக்க, வெட்கப்படும் கூச்ச சுபாவம் கொண்ட மொத்த பாடலிலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ரன்பீர் கபூரின் கண்களை மட்டுமே ரசிக்கும் ஒருவராக ராஷ்மிகா நடித்துள்ளார். பார்ப்பதற்கு அர்ஜுன் ரெட்டியில் வரும் அதே இரண்டு கதாபாத்திரங்கள் மாதிரி இந்தப் பாடல் இருந்தாலும் கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது.