அரிய நரம்பியல் நோயான ராம்சே ஹன்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இன்ஸ்டாகிராமில் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரின் ஒரு பக்கம் முகம் செயலிழந்துவிட்டது.


உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்து  நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு விளக்கியுள்ள அவர், "என் கண்ணை இமைக்கவில்லை. முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. இந்த மூக்கு துவாரம் நகராது" என்றார். இந்த நோய் எப்படி சரியாகும் என அவர் விளக்கவில்லை.


ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?


அமெரிக்க அரசின் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட தகவலின்படி, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ராம்சே ஹன்ட் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக முக பாவனைகளுக்கு தொடர்பான நரம்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஓடிகஸ் என்றும் இந்த நரம்பியல் நிலை அழைக்கப்படுகிறது. 


குழந்தைகளில் ஏற்படும் சின்னம்மை, வயது வந்தோருக்கு ஏற்படும் சிங்கிள்ஸ் (ஒரு வகை தோள் நோய்) ஆகியவை இதே வைரஸால்தான் ஏற்படுகிறது.


நரம்புகள் வீக்கம் அடையும்போது, அதனால் ஒழுங்காக செயல்பட முடியாது. இதன் விளைவாக, ஒரு பக்க முக பக்கவாதம் ஏற்படுகிறது. 


காது, வாயைப் பாதிக்கும் வலிமிகுந்த, கொப்புளத் தடிப்புகள் இந்த நோயால் ஏற்படுகிறது. 


நோயின் அறிகுறிகள்


வலி, தலைசுற்றல், செவித்திறன் இழப்பு, சத்தத்தால் காதுகளுக்கு பாதிப்பு, காதுகளில் பஸ்ஸிங் சத்தம் கேட்பது, சுவை இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். நோய் கட்டுப்பாட்டு மையங்கள் வெளியிட்டுள்ள நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்தத்தை பொறுத்துக் கொள்ளாமை, சுவை உணர்வு, உலர் கண், கண்ணீர், மூக்கடைப்பு மற்றும் பேச்சு குறைபாடு ஆகியவை இதன் கூடுதல் அறிகுறிகளாகும்.


சிகிச்சை


ராம்சே ஹன்ட் நோய்க்கான பொதுவான சிகிச்சைகள் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளே ஆகும். சில சமயங்களில் நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் வழங்கப்படுகிறது.


பாதிக்கப்பட்ட உடல் பகுதியின் இயக்கம் கடுமையாக கட்டுப்படுத்தப்படாமல் இருக்க, நோயாளிகளுக்கு பிசியோதெரபிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண