செண்பகமே செண்பகமே.. என்ற இந்த பாடலையும் மறக்க முடியாது. இதில் நடித்த நடிகர் ராமராஜனையும் மறக்க முடியாது. இந்த சூப்பர்ஹிட் எவர்கிரீன் பாடலில் ஹீரோயினாக பாவாடை தாவணியில் வந்த நடிகை சாந்தி பிரியாவுக்கு 'எங்க ஊரு பாட்டுக்காரன்' தான் அறிமுக படம். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த சாந்தி பிரியா இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக இருக்கிறார். அது தான் அவரின் முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.
பானுப்பிரியா தங்கை:
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை பானுப்ரியாவின் சகோதரி தான் ஷாந்தி பிரியா என்பது பலரும் அறிந்த ஒரு தகவலே. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்தி தொலைக்காட்சி பக்கம் போனவர் பின்னர் நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.
சரோஜினி நாயுடுவாக ரீ என்ட்ரி :
25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சாந்தி பிரியா தற்போது ரீ என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாக உருவாக உள்ளது. அப்படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் திரைத்துறையில் மீண்டும் என்ட்ரியாக உள்ளார் சாந்தி பிரியா. இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் "தடைகளை எல்லாம் தகர்த்து நாட்டில் உள்ள பெண்களின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிப்பதை மிகவும் பெருமையாக உணர்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமின்றி தாராவி பேங்க் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் ஹீரோயின் :
நடிகை சாந்தி பிரியா தமிழ் சினிமாவிலும் ரீ என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்க இருக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்குள் மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளார் சாந்தி பிரியா என கூறப்படுகிறது.
25 வயது முதல் 55 வயது வரை ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை வைத்து இப்படம் உருவாக உள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. சாந்தி பிரியாவின் இந்த ரீ என்ட்ரிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். இப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் சாந்தி பிரியா என எதிர்பார்க்கப்படுகிறது.