தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான  திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே காலங்களை கடந்தும் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ளும். அப்படி ரசிகர்கள் கொண்டாடிய ஒரு திரைப்படம்தான் விஜயகாந்த் நடிப்பில் நவம்பர் 4-ஆம் தேதி 2002ம் ஆண்டு வெளியான 'ரமணா' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்த பின்பும் நம் நினைவுகளில் கம்பீரமாக உள்ளது. இது தான் அப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 


2002ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக வெளியான இப்படம் பட்டி  தொட்டியெல்லாம் பிரபலமான ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்த  இப்படத்தினை இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ். கேப்டன் விஜயகாந்த், சிம்ரன், அஷிமா பல்லா, யூகி சேது மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இசைஞானி இளையராஜா. 



சமூக அக்கறை கொண்ட திரைப்படம் :


மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள், மாணவர்களின் போராட்டம், கட்டிடங்கள் இடிந்து விழுவது இப்படி எந்த ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் நிகழும்போதெல்லாம் நமக்கு உடனடியாக நினைவிற்கு வரும் திரைப்படம் ரமணா. சமூக அக்கறை மிக்க திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும் அவை அனைத்திலும் நிச்சயமாக ரமணா திரைப்படத்தின் சாயல் நிச்சயமாக இருக்கத்தான் 
செய்யும். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் வெளியான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதற்கு காரணம் ரமணா திரைப்படத்தின் போஸ்டர்களில் நடிகர் விஜயகாந்தின் இளமை பருவத்து புகைப்படம் இடம் பெற்று இருந்தது. 


ரசிகர்களை பாதித்த கிளைமாக்ஸ் :


அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், மாணவர்களின் உதவியோடு அரசு இயந்திரத்தை எப்படி சரி செய்கிறார் என்பது தான் படத்தின் மைய கதை. பொதுவாகவே நடிகர் விஜயகாந்த் மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர். அந்த வகையில் இப்படத்தில் அவர் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக நடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக புள்ளி விவரங்களை கூறும் அந்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் கிளைமாக்ஸ் காட்சிகளில் இறக்கும் படியான காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அது மக்கள் மனதை பெரிய அளவில் பாதித்தது. அதனால் அதை தவிர்த்து வந்த விஜயகாந்த் 'ரமணா' திரைப்படத்தின் உறுதியான திரைக்கதையால் கிளைமாக்ஸ் காட்சியில் மீண்டும் தூக்கில் இடும் படியான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. 


அனைவரின் பங்களிப்பும் சிறப்பு :


ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிகை சிம்ரன் நடித்திருந்தாலும் ஒரு அழகு தேவதை போல வந்து அனுதாபத்தை அள்ளினார். படத்தின் நாயகியான பாலிவுட் நடிகை ஆஷிமா பல்லா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றாலும் படத்தை நடத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த யூகி சேது தனது சிறப்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்தார். ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபுவின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் பிரமாண்டமாக அமைந்திருந்தது. 


கூடுதல் பலம் சேர்த்த இசைஞானி இளையராஜாவின் இசை :


இசைஞானி இளையராஜாவின் இசையில் அவரின் குரலில் 'வானவில்லே வானவில்லே...' பாடல்கள் இன்றும் நம் காதுகளில் ஒலிக்க செய்கிறது. அவரின் பின்னணி இசை பார்வையாளர்களை அப்படியே உருக செய்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் பின்னணி இசை அனைவரின் கண்களில் நீரோட்டத்தை பெருக்கியது.  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜயகாந்த் இருவரின் திரை பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ஒரு திரைப்படம் 'ரமணா' என்பது குறிப்பிடத்தக்கது.