ஆர்.ஆர்.ஆர் படத்தை விட காஷ்மீர் ஃபைல்ஸ் படமே ரியல் கேம் சேஞ்சர் ( திருப்புமுனையாக அமைதல்) படம் என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார்.
இது குறித்து பிரபல ஊடமான இந்தியா டுடேவிற்கு பேசிய அவர், “என்னை பொருத்தவரை ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய இரு படங்களில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமே ரியல் கேம் சேஞ்சர். இந்தப்படம் இயக்குநர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 250 கோடி வசூலிக்கிறது என்றால் அந்தப்படம் எந்தளவுக்கு பெர்பாமன்ஸ் செய்திருக்கிறது என்று பாருங்கள். காஷ்மீர் ஃபைல்ஸ் அதனை செய்திருக்கிறது. இரண்டு படங்களுமே வசூலைக் குவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எளிதாக எடுத்து விட முடியும். ஆர்.ஆர்.ஆர் படத்தை அப்படி எடுக்க முடியாது. எல்லோரிடமும் 500 கோடி பட்ஜெட் இருக்காது. ஆனால் உறுதியாக தயாரிப்பாளரிடம் 10 கோடி இருக்கும். ” என்று பேசினார்.
அதே போல தனது யூடியூப் சேனலில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி புகழ்ந்து பேசியிருந்த அவர், “ நான் சரியென நினைத்து கற்றுக்கொண்ட அனைத்தையும் இந்தப்படம் அழித்துவிட்டது. காஷ்மீர் ஃபைல்ஸ் படம் புத்தகத்தில் உள்ள அனைத்து விதிகளையும் உடைத்திருக்கிறது.
படத்தில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. படத்தின் இயக்குநர் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்று படம் எடுக்க வில்லை. இதை அனைத்து இயக்குநர்களும் முயற்சிக்க வேண்டும். இனி வரும் இயக்குநரோ அல்லது படத்தயாரிப்பாளரோ ஒரு புதியப்படத்தை எடுக்க திட்டமிட்டால் அவர்களால் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை திரும்பி பார்க்காமல் எடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.