பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது புகழ்பெற்ற படமான சத்யா படத்திற்கு பெயர் வைத்ததற்கான காரணத்தை 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிப்படுத்தி இருக்கிறார்.


ரங்கீலா, கத்ரா, கம்பனி, சத்யா ஆகிய பல ஹிட் படங்களை இயக்கி பாலிவுட்டின் முடி சூடா மன்னனாக இருந்தவர் ராம் கோபால் வர்மா. கடந்த 1998 ஆம் ஆண்டு சத்யா என்கிற படத்தை இயக்கினார். மனோஜ் பாஜ்பாய், ஜே.டி. சக்கரவர்த்தி, பரேஷ் ராவல் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். சத்யா திரைப்படம் தொடக்கத்தில் பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை என்றாலும் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அண்மையில் பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்து விவாதிக்கையில் இந்தப் படம் குறித்தான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ராம் கோபால் வர்மா. அப்போது இந்தப் படத்திற்கு தான் சத்யா என்று பெயர் வைத்ததற்கான காரணத்தையும் தெரிவித்தார் அவர்.


காதலித்தப் பெண்ணுக்காக வைத்த பெயர்


” சத்யா திரைப்படத்தின் போது தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் . அந்தப் பெண்ணின் பெயர் சத்யா என்றும் அவரை சந்தோஷப்படுத்தவே தனது படத்திற்கு சத்யா என்று பெயர் வைத்ததாக தெரிவித்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. மேலும் தனது படத்திற்கும் சத்யா என்கிற பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை என்பதால்  கதாநாயகனுக்கு சத்யா என்று பெயர் வைத்து சமாளித்திருக்கிறார் காதலில் மயங்கிய இயக்குநர்.


மனோஜ் பாஜ்பாய்.


 படத்தின் முக்கிய கதாபாத்திரமான சத்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தார்  நடிகர் மனோஜ் பாஜ்பாய். பின் படத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான பிக்கு கதாபாத்திரத்தில் அவரை நடிக்க கேட்டுக்கொண்டார் படத்தின் இயக்குநர். சத்யா கதாபாத்திரத்தில் நடிக்க பெரும் ஆர்வத்தில் இருந்த மனோஜ் இதனால் அப்போது மனம் உடைந்து போனதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் விளக்கம் இதுதான் “பிக்கு என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு நம்பகமான ஒரு நடிகர் தேவையாக இருந்தார். அந்த மாதிரியான ஒரு நடிகரால் மட்டுமே இந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. “


அதிர்ஷ்டவசமாக சத்யா படம் வெளியான பிறகு சத்யா கதாபாத்திரத்தைவிட மனோஜ் நடித்த பிக்கு கதாபாத்திரமே அனைவராலும் பேசப்பட்டது, அதுமட்டுமில்லாமல் மனோஜ் பாஜ்பாய்க்கு இன்றுவரை பிக்கு என்பது செல்லப் பெயராக இருந்து வருகிறது. ஆக மொத்தத்தில் தனக்கு பிடித்தப் பெண்ணை இம்பிரஸ் செய்ய ஒரு படத்தின் பெயரையே மாற்றிய உண்மை 25 ஆண்டுகளுக்குப் பின் நமக்கு தெரியவந்திருக்கிறது.