அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்த படத்தில் , அல்லு அர்ஜூன் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார். அவர் படம் முழுவதும் லாரி டிரைவரிலிருந்து டானாக மாறுவார் என தெரிகிறது. அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லனாக களமிறங்குகிறார் மல்லுவுட்டின் வெர்சடைல் நடிகர் ஃபஹத் பாசில் . அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சம்ந்தா ஒரு குத்து பாடலில் நடனமாடியிருக்கிறார். இந்த சூழலில் படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக இருக்கும் அந்த டிரைலர் , நிச்சயம் அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை பார்த்த ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் டிரைலரில் அல்லு அர்ஜூனின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, டிரைலரை பார்த்துவிட்டு டிவிட்டரில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் “ இது போன்று பயமில்லாமல் ,தத்ரூபமாக நடிக்க அல்லு அர்ஜூன் என்ற ஒற்றை சூப்பர் ஸ்டாரால்தான் முடியும். நான் பவன் கல்யாண், மகேஷ் பாபு , சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் , இது போலவோ அல்லது இதற்கு மேலாகவோ செய்ய தைரியம் இருக்கா. புஷ்பா என்றால் பூ என அர்த்தமில்லை . அது நெருப்பு “ என ட்வீட் செய்து, மேலே குறிப்பிட்டுள்ள நடிகர்களையும் டேக் செய்துள்ளார். இது ரஜினிகாந்த் , மகேஷ்பாபு உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அந்த ட்வீட்டிற்கு கீழே தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
புஷ்பா படம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.