தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராம் சரண் ஒரு சர்வதேச செலிபிரிட்டியாக பிரபலமடைந்துள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலின் பிரிவில் ஆஸ்கர் விருதினை பெற்ற நமது இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அதற்கு பிறகு ராம் சரண் மார்க்கெட் வேற லெவலில் எகிறிவிட்டது.
அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் :
2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்தை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராம் சரண். அதனை தொடர்ந்து ஆரஞ்சு, ரச்சா, நாயக், ஏவடு, மாவீரன் போன்ற ஏராளமான தெலுங்கு திரைப்படத்திலும் ஜன்சீர் என்ற ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். பல வெற்றிப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருது, நந்தி விருது போன்ற விருதுகளையும் குவித்துள்ளார். தற்போது நடிகர் ராம் சரண், ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற பிரமாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிறப்பான ஆண்டாக அமைந்தது :
நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான அவர்களின் திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற பந்தத்தையும் கடந்து பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற உள்ளனர். தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர். படத்தின் அமோகமான வெற்றியை தொடர்ந்து ராம் சரண் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை ராம் சரண் கடந்த டிசம்பர் மாதம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மனம் திறந்த உபாசனா :
அந்த வகையில் உபாசனா திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்தது தான் பலரின் கேள்வியாக இருந்தது. இது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ராம் சரண் மனைவி உபாசனா. "மற்றவர்கள் விருப்பப்படுகிறார்கள் என்பதற்காக குழந்தை பெற்று கொள்ளாமல் நாங்கள் விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்து இருந்தோம். அதே போல நடந்தது தற்போது மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் குழந்தையை வரவேற்பதை சிறப்பான ஒரு தருணமாக கருதுகிறேன். பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், மன ரீதியிலும் நங்கள் இருவருமே முழுவதுமாக வளர்ச்சியடைந்துள்ளதாக கருதுகிறோம். எனவே இது சரியான நேரம். இது நாங்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவு" என்றார்.