ஆர்.ஆர்.ஆர். படத்தின் அறிமுக காட்சி குறித்து அப்படத்தின் ஹீரோ ராம்சரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம்  ‘ஆர்.ஆர்.ஆர்’. பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த ஆர்.ஆர்.ஆர் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 


இப்படம் அல்லூரி சீதா ராமராஜு மற்றும் கொமரம் பீம் எனும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கற்பனை கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அக்‌ஷய்குமாருடன் ராம்சரண் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தொடக்கக் காட்சி குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு தொடக்கக் காட்சிக்கு மட்டுமே 35 முதல் 40 நாட்கள் செலவிடப்பட்டதாகவும், ஆனால் அக்‌ஷய்குமாரின் பிருத்விராஜ்  படம் 40 நாட்களில் முடிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன் என தெரிவித்துள்ளார். 






மேலும் கிட்டத்தட்ட 3000 முதல் 4000 பேருடன் புழுதி பறக்கும் பின்னணியில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. எனக்கு சிறுவயதிலிருந்தே  தூசு என்றாலே அலர்ஜி தான். இதற்காக சைனஸ் அறுவை சிகிச்சை கூட செய்துகொண்டேன். ஆனால் என் விதியை பாருங்கள் என நான் புழுதிக்கிடையில் வேலை செய்ய வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து பேசிய அக்‌ஷய்குமார், பிரித்விராஜ் திரைப்பம் 42 நாட்களில் படமாக்கப்பட்டது என்றும், சரியான நேரத்தில் தொடங்கி முடித்தோம். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அப்படம் தாமதமாக வெளியானதாகவும் தெரிவித்தார்.