இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


ராம் சரண்


முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு தமிழில் கணிசமான அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கில் அவர் நடித்துள்ள மாவீரன், யெவடு  உள்ளிட்ட படங்கள் தமிழில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த படங்கள். ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர் ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார் ராம் சரண். இப்படியான நிலையில் இன்று ராம் சரண் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தற்போது அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.


கேம் சேஞ்சர்






கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண் , பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ஜரகண்டி என்கிற பாடலை தற்போது இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.


ஜரகண்டி பாடல்


அனந்த ஸ்ரீராம் ஜரகண்டி பாடலை எழுதியுள்ளார். பஞ்சாபி பாடகரான தலேர் மெஹந்தி மற்றும் சுனிதி செளஹன்  இந்தப் பாடலை இனைந்து பாடியுள்ளார்கள். பிரபு தேவா இந்தப் பாடலுக்கு நடனம் இயக்கியுள்ளார். வழக்கம்போல் ஷங்கரின் பிரம்மாண்டமான கற்பனையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பிரம்மாண்டமான செட், ஆடை வடிவமைப்பு மற்றும் ராம் சரண் கியாரா அத்வானியின் குத்தாட்டத்தைப் பார்ப்பதற்கு அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலை நினைபடுத்துகிறது இந்தப் பாடல். 


இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு படம் இந்தியன் 2 . கமல்ஹாசன் , ரகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது