தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் செல்ல மகன் ராம் சரண். இவருக்கும் உபாசனா காமினேனி என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் தற்போது பெற்றோர் ஆக உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாஸ் ஹீரோ ராம் சரண்:
டோலிவுட்டின் முன்னணி நடிகர் ராம் சரண். இவர், தெலுங்கு சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராக விளங்குகிறார். 2007ஆம் ஆண்டில் ‘சிறுத்தா’ என்ற படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார்.
அதன் பிறகு, ராஜமெளலியின் மஹதீரா படத்தில் மாஸ் ஹீரோவாக மக்களுக்கு அறிமுகமானார். இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அப்போதைய இளம் பெண்கள் இப்படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரணை தங்களது க்ரஷ் லிஸ்டில் வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
10 வருட திருமணம்:
ராம் சரண் தேஜா, 2012ஆம் ஆண்டில் உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், ராம் சரணின் சிறுவயது தோழி எனக் கூறப்படுகிறது. ராம் சரணை தனது மானசீக காதலனாக ஏற்றுக்கொண்ட பல பெண்களுக்கு இது பெரும் இடியாக வந்து விழுந்தது. காலங்கள் பல கடந்து போக, இந்த ஜோடியையும் பலர் மறந்து போனார்கள். ராம் சரண்-உபாசனா ஜோடி, சமீபத்தில் தங்களது 10 ஆண்டு திருமண தினத்தை இத்தாலியில் கொண்டாடினர்.
சிறு வயதில் நண்பர்களாக இருந்த இவர்கள், கல்லூரி பருவ நாட்களில் மீண்டும் சந்தித்துள்ளனர். பிறகு, காதலர்களாக மாறியுள்ளனர். 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த இவர்களது திருமண நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சிரஞ்சீவியின் பதிவு :
ராம் சரண்-உபாசனா காமினேனியின் திருமண வாழ்கையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, முக்கியமான திருப்புமுனை ஒன்று வர காத்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவர்கள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்காக இவர் வெளியிட்டுள்ள கார்டில், குழந்தை ஹனுமன் கையில் ஜடாயுதத்துடன் இருப்பது போன்று பொம்மை வரையப்பட்டுள்ளது. இதனால், “பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை சிரஞ்சீவி சொல்லாமல் சொல்கிறாரோ?” என்று பலர் குழப்பத்தில் சுற்றி வருகின்றனர்.
ஆர் சி 15:
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவிற்கு உருவாகி வரும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி வருகிறது.